நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம் : மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? : அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். 39 வயதான இவர், முந்திரி விவசாயம் செய்து வந்தார். இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த மாதம் செல்வமுருகனை கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. செல்வமுருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்ட போது, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தனது கணவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக செல்வமுருகன் மனைவி பிரேமா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், அவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தங்களிடம் தெரிவிக்காமல் உடலை பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறியுள்ளார். எனவே, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விருத்தாசலம் கிளைச் சிறையில் மாஜிஸ்திரேட் நேரில் சென்று இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதுடன், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, செல்வமுருகன் மரண விவகாரத்தில், சிபிசிஐடி வழக்குப்பதிந்துள்ளது. வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று காவல்துறை டிஜிபி தெரிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து, 8 வாரத்தில் அறிக்கை அளிக்குமாறு, மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவுக்கு, அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அக்டோபர் 30-ஆம் தேதி நகைப் பறிப்பில் செல்வமுருகன் ஈடுபட்டார் என போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், 29ஆம் தேதியே அவரை, நகையை பறிமுதல் செய்வதாகக் கூறி, நகைக்கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற காட்சி, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி வெளியானதை அடுத்து, உண்மை கண்டறியும் குழுவினர், நகைக்கடைக்குச் சென்று, ஆதாரங்களை கைப்பற்ற முயற்சித்தனர்.
அதை தடுக்கும் வகையில், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய காவலர் செந்தில் என்பவர் நகைக்கடைக்குச் சென்று அங்கு பணியில் இருந்த பெண்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.
– நமது நிருபர்