மணல் கொள்ளையை தடுத்த எம்.பி. சின்ராஜ்
பரமத்தி வேலூர் – மோகனூர் சாலையில் குப்புச்சி பாளையம் அருகே உள்ள பில்லாபாறை பகுதியில் லாரிகளில் மணல் திருடி வருவதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு வந்த சின்ராஜ் எம்.பி. மணல் திருடி வந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தார். பின்னர் அவர் பரமத்திவேலூர் போலீசார் மற்றும் பரமத்தி வேலூர் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் அங்கு வந்த பரமத்தி வேலூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோரிடம் லாரிகளை எம்.பி. ஒப்படைத்தார். தப்பியோடிய மணல் லாரி டிரைவர்கள் மற்றும் மணல் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற புதிய அரசு சட்டக்கல்லூரி தொடக்கவிழாவில் சின்ராஜ் எம்.பி. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசும்போது, மாவட்டத்தில் சில இடங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் எங்கும் மணல் கொள்ளை உள்ளிட்ட எந்த ஒரு சட்டவிரோத செயல்களும் நடைபெறவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளையை தடுக்க பொதுமக்களே களத்தில் இறங்கியுள்ளனர். மணல் அள்ள வாகனங்கள் செல்ல முடியாத படி பள்ளம் தோண்டி அதிரடியில் ஈடுபட்டுள்ளனர்.
வெம்பாக்கம் தாலுக்காவில உள்ள கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு மற்றும் செய்யாறு உள்ள நிலையில் ஆற்றின் கரையோரங்களில் நடக்கும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் தெரியும் அளவுக்கு 20 அடி ஆழம், 100 அடி அகலம், சுமார் 2 ஆயிரம் அடி நீளத்திற்கு ஆற்றில் மணல் எடுக்கப்பட்டுள்ளது.
லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், தங்களால் இரவில் நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மணல் கொள்ளையைர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ள கிராம மக்கள் அதிரடி நடவடிக்கையாக மணல் லாரிகள் ஆற்றுக்குள் செல்லமுடியாத படி ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் அமைத்துள்ளனர். அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்