ஆன்லைனில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை ! பெண் உதவி ஆய்வாளரின் கணவர் கைது !
சமீப காலமாக இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதும், குறிப்பாக ஆன்லைன் எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை செய்யும் சமூக விரோத கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த புழல் பகுதியில் போதை பவுடர் மெத்தபெட்டமின் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் இது சம்பந்தமான தகவல் புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவனுக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படை போலீசார் பாடி மேம்பாலம் அருகே பதுங்கியிருந்து கண்காணித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஆறு நபர்களை மாறுவேடத்தில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, புழல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு காவல் பெண் உதவி ஆய்வாளரின் கணவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த குமரவேல், புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த தீபேஷ், பார்த்திபன், ஓட்டேரியை சேர்ந்த அமீர்பாஷா, எஸ். எஸ். புரம் சுபாஷ், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மைக்கேல் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள்
ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை
செய்வதற்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் இவர்களிடமிருந்த மூன்று கிராம் மெத்தபெட்டமின் பவுடரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் புழல் காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதுள்ளார். பெண் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் இந்த குற்ற சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
– கே. எம். சிராஜூதீன்
.