பல்வேறு சாதனையாளர்களுக்கு மக்கள் ஆணையம் இதழின் சார்பில் விருது !
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில்கள் முடங்கி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி இருந்த காலகட்டத்தில் தங்களது உயிரை துட்சமாக நினைத்து இரவு, பகல் பாராமல் செய்தி சேகரித்து வழங்கிய பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு சாதனையாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் மக்கள் ஆணையம் மாத இதழின் சார்பில் விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் அரசு விழாக்களில் பாடவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இந்த விழாவிலும் இசைத்தட்டுக்களுக்குப் பதிலாக விழாக்குழுவினரே பாடி அசத்தியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் குழந்தைகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கல்வி கற்று வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவி தனது தந்தையின் உதவியுடன் தனது இரண்டு சகோதரிகள் துணையோடு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பனைவிதைகளை திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இந்த மாணவிகள் மூவரையும் அழைத்து அவர்களுக்கு விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பாராட்டி கௌரவித்திருக்கிறார்கள்.
இதேபோல், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களை தேடிப்பிடித்து அவர்களது தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில் சமூக சேவையாற்றிய ஐம்பது நபர்களுக்கும், பத்திரிகையாளர்கள் முப்பது நபர்களுக்கும் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணையம் மாத இதழின் ஆசிரியர் முத்தையாவின் செயலைப் பாராட்டியும், நன்றி தெரிவித்து பேசுவதையும் பார்த்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தனது மகன் தமிழகம் முழுவதும் திறமையான சாதனையாளர்களை தேடிப்பிடித்து அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டி மகிழ்கிறானே என்ற சந்தோசம் தான் அந்த ஆனந்த கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் கதை. சேலம் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் ஒரு உழைப்பாளருக்கு மகனாகப் பிறந்து தனது அயராத உழைப்பால் தனது மனைவியின் ஒத்துழைப்போடு இன்று மக்கள் ஆணையம் மாத இதழ், பரதேசி நாளிதழ் என இரண்டு பத்திரிகைகளை தன்னலமின்றி நடத்திவரும் ஆசிரியர் முத்தையாவை விழாவிற்கு வருகை தந்த தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். இதில் உழைப்பால் உயர்ந்ததால் தான் உண்மையான உழைப்பாளர்களை அழைத்து பாராட்டுகிறார் என்று அனைவரும் பேசியது தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
– சூரியன்