தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு..! சர்ச்சையில் சென்னை ஐஐடி!
சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு இணையம் வழியாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய பி.வி.சிந்து, ` பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எதனைச் செய்தாலும் அதனை ஆர்வத்துடன் செய்யுங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை’ என்றார்.
அதேநேரம், `வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கிய பட்டமளிப்பு விழாவானது, தேசிய கீதம் இசைத்தலோடு நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்ற பிறகு சம்ஸ்கிருதத்தில் மந்திரம் கூறி முடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் இதேபோல் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற அந்தக் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக, அப்போது விளக்கமளித்த ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருதப் பாடலை பாடியதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ` சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது, முதல் தடவையல்ல. முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ ஐ.ஐ.டி தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா? தமிழ்நாடு அரசும் கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து சம்ஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்' எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள செய்தியிலும்,
சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐ.ஐ.டியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 20ம் தேதி சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 1959ம் ஆண்டு சென்னை ஐஐடி உருவாக்கப்பட்டபோது அதற்காக தமிழக அரசு 250 ஹெக்டேர் (617.5 ஏக்கர்) நிலத்தை ஐஐடிக்காக வழங்கியது.
அதிலிருந்து சென்னை ஐஐடியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு வகைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. தற்போதைய அரசும் அதை தொடர்ந்து செய்யவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடியின் தேசிய அளவிலான வசதியை அமைப்பதற்காக தற்போது ஆய்வில் உள்ள சைரோ-எலெக்ட்ரான் மைக்ராஸ்கோபியை வாங்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தீர்கள்.
சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். மாநில அரசு மற்றும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உள்பட அந்த மாநிலங்களின் வாழ்த்து பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை தங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன். எனவே, சென்னை ஐஐடியில் நடைபெற உள்ள அடுத்து வரும் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.