தமிழகம்

எலிக்காய்ச்சல் அபாயம்! எச்சரிக்கை

கேரளாவில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை பெருமழையாக மாறியது. அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவில் வீடு, கட்டிடங்கள் புதைந்தன. தமிழகத்தில் இருந்து தொடர்ந்து வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மழை ஓய்ந்து கடந்த 15 நாட்களாக கேரளாவில் வெயில் கொளுத்தும் நிலையில் அங்குள்ள பல பகுதிகளில் எலி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டம், கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது ஓட்டுனர், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த 50 வயது அங்கன்வாடி பணியாளர் காந்திமதி ஆகியோர் கடந்த சில நாட்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு எலிக்காய்ச்சலுக்கு மருத்துவம் பெற்று வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு சென்று திரும்பியவர்களுக்கு தான் இந்த நோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கொண்டம்பட்டி சதீஷ்குமார் உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன்பாக கேரளாவிலுள்ள மனைவி இல்லத்திற்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பியிருக்கிறார் என்பதால் அவருக்கு கேரளத்தில் நோய் தொற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் அங்கன்வாடி பணியாளர் காந்திமதியோ, எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேறு பலருக்கோ கேரளத்துடன் எந்த தொடர்புமில்லை. ஆகவே, கேரளத்தைத் தவிர தமிழக மாவட்டங்களில் ஏதோ ஒரு ஆதாரத்திலிருந்தும் இந்த நோய் பரவுகிறது என்ற உண்மையை புறந்தள்ளி விடக் கூடாது.
எலிக்காய்ச்சல் உயிர்க்கொல்லி நோய் அல்ல. சரியான நேரத்தில் நோய் கண்டறிப்பட்டால் எலிக்காய்ச்சலை மிகவும் எளிதாக குணப்படுத்தி விடலாம். எனவே, எலிக்காய்ச்சல் நோயைக் கண்டு மக்கள் எந்த வகையிலும் அச்சமடையத் தேவையில்லை.
எலிக்காய்ச்சல் நோய் எலி, பன்றிகள், பூனை போன்ற உயிரினங்களின் வயிற்றில் வளரும் லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியா மூலம் பரவும். தொடக்கத்தில் சாதாரணக் காய்ச்சலாகத் தான் இது தொடங்கும். பின்னர் கால்வலி, உடல்வலி ஆகியவற்றுடன் கண் எரிச்சலும் ஏற்படும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். வாந்தி, வயிற்றுபோக்கும் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து இறப்பு ஏற்படும். எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயால் இருவர் உயிரிழந்ததற்கு காரணம் நோயின் கடுமை என்பதை விட, எலிக்காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை என்பது தான் உண்மை. எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்து அலட்சியமாக இருந்தது தான் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு எலிக்காய்ச்சல் நோய் குறித்தும், நோய்த்தடுப்பு உத்திகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.
விலங்குகளின் வயிற்றில் உருவாகும் லெப்டோஸ்பைரா பாக்டீரியா அவற்றில் கழிவுகளுடன் கலந்து வெளியேறும். இவை கலந்த கழிவுநீர், ஈரப்பதமான மண்தரை ஆகியவற்றில் மனிதர்கள் வெற்றுக் காலுடன் நடக்கும் போது, காலில் உள்ள துளைகள் மூலம் பாக்டீரியா மனித உடலுக்குள் சென்று எலிக்காய்ச்சலை உருவாக்கும். எனவே, தேங்கிக்கிடக்கும் தண்ணீர், விலங்குகளின் கழிவுகள் கலந்த நீர், ஈரப்பதமான தரை ஆகியவற்றில் செருப்பு அணியாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும். உணவுத் தூய்மையைக் கடைபிடிப்பது, குடிநீரைக் காய்ச்சிக் குடிப்பது ஆகியவை மிகவும் அவசியமானதாகும்.
சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எலிக்காய்ச்சலின் முற்றிய நிலை நோயால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இந்நோயை தமிழக சுகாதாரத்துறை மிகவும் அலட்சியமாக எதிர்கொள்கிறது. கழிவு நீர் மூலமாக லெப்டோஸ்பைரா பாக்டீரியா பரவும் வாய்ப்பிருக்கிறது எனும் நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் குழாய்களை சீரமைப்பதாகக் கூறிக் கொண்டு கழிவு நீரை இறைப்பான் கொண்டு தெருக்களில் இறைத்து ஓட விடும் கொடுமை நடக்கிறது.


அறிகுறிகள் என்ன?
கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கும். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறி. பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து, நோய் குணமாகிவிடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பயணம் செய்து, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி, அந்தந்த உறுப்புகளையும் பாதிக்கும். அப்போது அடுத்தகட்ட அறிகுறிகள் தோன்றும்.
எந்த உறுப்பைக் கிருமிகள் பாதிக்கின்றனவோ அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டாக, கல்லீரல் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்சொன்ன அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் வீக்கமடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், சிறுநீர் பிரிவதில் பிரச்சினை உண்டாகும். அப்போது கால், கை, முகம், வயிறு வீங்கும். மூளை பாதிக்கப்பட்டால், மூளைக் காய்ச்சலுக்கு உரிய எல்லா அறிகுறிகளும் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்படும்போது நிமோனியா நோய் வந்து, இருமல், இளைப்பு வரும். இரைப்பை பாதிக்கப்படும்போது ரத்த வாந்தி வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்தில் ரத்தம் வெளியேறும். இது இதயத்தைத் தாக்கினால், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்த நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவருக்குக் கல்லீரலும் சிறுநீரகமும் மோசமாகும். இதற்கு ‘வியில்ஸ் நோய்’ என்று பெயர். மஞ்சள்காமாலைதான் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். சிலருக்கு ரத்த உறைவுக் கோளாறுகளும் சேர்ந்துகொள்ளும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இந்த நோய் வந்த 100 பேரில், 30 பேருக்கு மரணம் நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு மோசமான நோய் இது. ‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test – MAT) எலிக் காய்ச்சலை உறுதிசெய்ய உதவுகிற முக்கியமான பரிசோதனை. இத்துடன் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகள், கல்லீரலுக்குரிய பரிசோதனைகள், சிறுநீரகப் பாதிப்பை அறியும் பரிசோதனைகள், ஐஜிஎம் எலிசா பரிசோதனை (IgM ELISA Rapid Test), பிசிஆர் பரிசோதனை (Real time DNA PCR Test), முதுகுத் தண்டுவட நீர்ப் பரிசோதனை ஆகியவை இந்த நோயை உறுதிசெய்யவும் இதன் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

என்ன சிகிச்சை?
இந்த நோய்க்குப் பலதரப்பட்ட நோய்முறி மருந்துகள் உள்ளன. நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் இதைக் குணப்படுத்திவிடலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முறைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். மேலும், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றிலும் பாதிப்பு இருந்தால், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தரப்படும். மழைக் காலங்களில் மட்டும் முன்னெச்சரிக்கையாக, டாக்சிசைக்ளின் 200 மி.கி. மாத்திரையை வாரத்துக்கு ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால், எலிக்காய்ச்சல் வருவதைத் தடுக்கவும் முடியும்.
ஆரம்பகட்ட அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே இருப்பதால், பெரும்பாலானோர் நோயைச் சரியாகக் கவனிக்கத் தவறுகின்றனர். மேலும், இந்த நோயின்போது காமாலை ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், அதை சாதாரண மஞ்சள் காமாலை என்று நினைத்து வீட்டுச் சிகிச்சைகளில் இறங்கிவிடுகின்றனர். இதனால், இந்த நோய்க்கான முறையான சிகிச்சை உடனே கிடைக்க வழியில்லாமல், நோயை அகோரப்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, பருவ மழை தொடங்கும் முன்பே, மாநில சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்குத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதிலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கழிமுகங்கள் ஆகியவற்றில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் தூர் வாருவதும் முக்கியம்.
தெருக்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தி, மழைக்காலத்தில் அவை அடைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் நோய்ப் பாதுகாப்பு, அரசு எடுக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.
மக்களின் உயிர் விலைமதிப்பற்றது. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அதை இழந்து விடக்கூடாது. எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எலிக்காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றுக்கெல்லாம் மேலாக எலிக்காய்ச்சல் என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்கலாம்? என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button