அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கம் ஏன்?
அதிமுக முன்னாள் அமைச்சரும் இராமநாதபுரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா மீது தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவர் தான் கொண்ட கொள்கையில் என்றும் உறுதியுடன் இருப்பவர். அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மீது தீவிர பற்றுக்கொண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன்பிறகு ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று ஜெவின் விசுவாசியாக தீவிரமாக செயல்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பதவிகள் அவரைத் தேடி வந்தது.
அதன்பிறகு மாநில சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், வக்பு வாரியத் தலைவர் என ஜெயலலிதா அன்வர்ராஜாவுக்கு வழங்கினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பழனிச்சாமி, பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கத் தொடங்கியதும் இருவரையும் அனுசரித்து செயல்பட்டு வந்தார் அன்வர் ராஜா. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா தண்டனை முடிந்து சென்னை திரும்பினார். அந்த சமயம் அதிமுக ஆட்சிக்காலம் நிறைவு பெற்று தேர்தல் வர இருக்கும்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அன்வர் ராஜா அளித்த பேட்டியில் சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம் என்றார். அப்போது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால் தான் தென்மாவட்டங்களில் அதிமுக தோல்வியடைந்தது. சசிகலாவை இணைத்து தேர்தலை சந்தித்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர் என்று நினைத்துக் கொண்டு ஆணவத்தோடு இருந்ததால் தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. அமமுக வாங்கிய வாக்குகளும் அதிமுக வாங்கிய வாக்குகளும் இணைந்திருந்தால் அதிமுகதான் ஆட்சியை அமைத்திருக்கும். பழனிச்சாமி பதவி கொடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்து அவரையே நிராகரித்துவிட்டார். ஜெயலலிதா அமைத்த ஆட்சியையும் இழந்து கட்சியை கபளிகரம் செய்து வருகிறார்.
அதிமுக இரட்டைத் தலைமையால் இரண்டு அணிகளாக சிதறி இருக்கும் நிலையில் சசிகலாவை இணைத்து அவரது தலைமையில் அதிமுக இயங்கினால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று பழனிச்சாமிக்கு எதிராக தனியார் தொலைக்காட்சியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரிடமும் அன்வர் ராஜா பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்வர்ராஜா பேச எழுந்த போது சிவி சண்முகம் எழுந்து ஒருமையில் பேசி அன்வர் ராஜாவை திட்டத் தொடங்கினார்.
அப்போது பெரும் கூச்சலும், குழப்பமும் அங்கு ஏற்பட்டது. இதன் பின்னணியில் பழனிச்சாமி இருந்ததாக அதிமுகவினர் மத்தியில் அப்போது பேசப்பட்டது. அன்வர் ராஜாவை அவமானப்படுத்தி கட்சியை விட்டு அவராகவே வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் பழனிச்சாமியின் தூண்டுதலால் தான் சிவி சண்முகம் அன்வர் ராஜாவை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார்.
ஆனால் அன்வர் ராஜா அதிமுகவின் மீது தான் கொண்ட தீராத பற்றாலும், மூத்த உறுப்பினர் என்பதாலும் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் அதிமுகவிலேயே தொடர்ந்து வந்தார். அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்றால் தான் தொண்டர்களையும், கட்சியையும் தக்க வைக்க முடியும் என்ற தனது கருத்தையும் முன்வைத்து வந்தார். இந்நிலையில் பன்னீர் செல்வமும், பழனிச்சாமியும் இணைந்து அன்வர் ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவிற்கு சென்றுள்ள நிலையில் மீதம் இருப்பவர்களையும் கட்சியை விட்டு நீக்குவது அதிமுகவுக்கு நல்லதல்ல என்பதே அதிமுக நிர்வாகிகளின் குரலாக இருக்கிறது.
– வெ.சங்கர்