ஆதார் அட்டை வடிவில் அசத்தல் அழைப்பிதழ்
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் முக்கியமான அடையாளங்களுள் ஒன்று ஆதார் அடையாள அட்டை. மக்களின் வாழ்வாதாரங்களுள் அவசியமான ஒன்றாக இன்று ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், வங்கிக் கணக்கு துவங்குதல், சிம் கார்டு வாங்க, கேஸ் இணைப்பு, குடும்ப அட்டை பெறுதல் போன்ற எண்ணற்ற மக்களின் தேவைகளுக்கு ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது.
மக்களின் முக்கியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆதார் அட்டையின் அவசியத்தை விளக்கும் வகையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சார்ந்த முத்தையா, அம்மு தம்பதியினர் தனது மகளின் காதணி விழாவிற்கு ஆதார் அடையாள அட்டை வடிவில் அழைப்பிதழை அச்சடித்து தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட இவர்களது உறவினர்களும், நண்பர்களும் ஒன்றும் புரியாமல் காதணி விழாவிற்கு அழைத்தால் நாங்கள் வரப்போகிறோம். அதற்கு எதற்காக உங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை வழங்குகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக குழந்தையின் தந்தை முத்தையாவை தொடர்பு கொண்டு நமது செய்தியாளர் கேட்டபோது, அரசின் சேவைகள், மானியங்கள் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை இன்று அவசியமான ஒன்றாகி விட்டது. இதேபோல் மருத்துவ சேவைகள், சான்றிதழ்கள், கல்வி, வேலைவாய்ப்புகள், பான்கார்டு பெறுவதற்கும், ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கும் இன்று ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இன்னும் ஆதார் அடையாள அட்டையின் அவசியத்தை உணராமல் அரசாங்கம் சொல்வதால் ஆதார் அட்டை பெற்றிருக்கிறோம் என்கிற ரீதியில் தான் மக்கள் இருக்கிறார்கள்.
ஆதார் அடையாள அட்டைதான் வரும் காலங்களில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் கிரீன்கார்டு போல் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆதார் அடையாள அட்டை இருந்தால் தான் இந்த நாட்டின் குடிமகன் என்கிற கட்டாயம் வந்தாலும் வரலாம். இதனால் தான் ஆதார் அடையாள அட்டையின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் எனது மகளின் காதணி விழாவிற்கு ஆதார் அடையாள அட்டை வடிவில் அழைப்பிதழை அச்சடித்து வழங்கினேன். இன்னும் கிராமப்புறங்களில் ஆதாரின் அவசியம் தெரியாமல் எத்தனையோ மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த அழைப்பிதழை ஆதார் விழிப்புணர்வாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் முத்தையா.
அடிப்படையில் முத்தையா ஒரு பத்திரிகையாளர். அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும், மக்களின் மனநிலையை அரசுக்கு தெரியப்படுத்தும் மகத்தான பணியை தனது மாத இதழின் வாயிலாக சிறப்பாக செய்து வரும் முத்தையாவின் சிந்தனையில் உதித்திருக்கும் ஆதார் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தலைவாசல் வட்டாரத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. பத்திரிகை ஆசிரியர் முத்தையா அம்மு தம்பதியினரின் குழந்தைக்கு நமது இதழின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
– நமது நிருபர்