தமிழகம்

அரசியல்வாதிகளுக்கு தொண்டை போனால் தொண்டு போய்விடும்… -: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ தமிழ் அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இம்மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வேலு, கவிப்பேரரசு வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் ஆலோசகர் காமேஸ்வரன், தலைவர் திருமலைவேலு, செயலாளர் எம்.என்.சங்கர், பொருளாளர் ரகுநந்தன், மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காது, மூக்கு, தொண்டை, கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழை ‘தமிழ்’ என்று அழைக்கத்தோன்றுவது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடக்கும். ஆனால், தமிழில் நடைபெறும் என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அறிவித்து அதனை நடத்திக்கொண்டிருக்கிறார். குறிப்பாக இதுபோன்ற மாநாடுகள் பெரிய நட்சத்திர உணவு விடுதிகளில் தான் நடக்கும். ஆனால், இந்த மாநாடு முத்தமிழ் பேரவையில் நடப்பது கூடுதல் சிறப்பு.

இன்றைக்கு கலைஞர் இருந்து இருந்தால் நிச்சயம் பெருமைப்பட்டு இருப்பார். கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது முக்கிய மருத்துவராக இருந்தவர் மருத்துவர் காமேஸ்வர். கலைஞரின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் தனக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு மருத்துவர் நோயாளி என்று இல்லாமல் தந்தை மகன் உறவு என்று இருந்ததாக கூறினார். அந்த வகையில் அவர் எனக்கு சகோதரர்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு காதுகேளாமை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இது ஜெனிட்டிக் என்று சொல்லக்கூடிய மரபு வழிப்பிரச்னை சார்ந்து உள்ளன. அதேபோல, சுற்றுச்சூழல் மாசடைதலும் இதற்கு இரு காரணமாக உள்ளன. மேலும், தாய்மொழியில் இம்மாநாடு நடத்தப்படுவது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளிகளில் தமிழ், கல்லூரிகளில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், இசையில் தமிழ் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அண்ணா, கலைஞர் வழியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக விளங்கி வருகிறது.

அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அரசின் சார்பில் வெளியிட்டுள்ளோம். தொழில் படிப்புகளை தாய் மொழியில் படிக்க நூல்களை தாய் மொழியில் மொழி பெயர்க்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால் அதிக தொகையை செலவழிக்க வேண்டியதாக உள்ளது அதன்படி, நவீன மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மக்களை தேடி மருத்துவம், நம்மைக்காக்கும் 48 திட்டங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.

என்றாலும் அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில் அரசு மட்டும் இதை முன்னெடுத்தால் போதாது. தனியார் மருத்துவமனையின் பங்களிப்பும் தேவையாக உள்ளது. அந்தவகையில், தனியார் மருத்துவமனை பங்களிப்பில் கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கல்வியும் மருத்துவமும் சேவை துறைகள்.

அவை சேவை துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு மெடிக்கல் சிட்டி, மெடிக்கல் கேப்பிட்டல் என்று தான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி இங்கு உண்டு. அதனால் மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதில், மோகன் காமேஸ்வரனை போன்றவர்கள் தாங்களை போன்ற திறமைசாலி மருத்துவ நிபுணர்களை உருவாக்க வேண்டும். ” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்கு காது பிரச்னை ஏற்படவே நான் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். நான் வருவது தெரிந்து எனது தாய் எனக்கு சூப் கொண்டு வருவார். காவலர்களை வெளியே நிற்க வைத்து விட்டு அவரது அறையில் இருக்கும் எனது தாயை சந்தித்து சூப் வழங்க சொல்வார் மருத்துவர் காமேஸ்வரன். காதுகளுக்கான cochlear implant இலவசமாக ஏழைகளுக்கு வழங்க தூண்டியவர் மோகன் காமேஸ்வரன் தான்.

சில நாட்கள் முன், சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவில் வட மாநில பெண் தன் மகனுக்கு cochlear சிகிச்சை கிடைக்கப்பெற்றது என மகிழ்ச்சியாக கூறினார். தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக cochlear சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம். தொண்டை போய் விட்டால் எங்கள் தொண்டே போய்விடும்.

நிர்வாகத்தில், ஆட்சியில், கோயில்களில் நீதிமன்றங்களில் தமிழ் என எங்கும் தமிழ், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக இந்த அரசு உள்ளது. மருத்துவ நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அதே போன்று தொழில்பயிற்சிகளுக்கான படிப்புகளும் தமிழில் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவம் அதிக செலவு செய்ய வேண்டியதாகி வருகிறது. அரசு மக்களை தேடி மருத்துவம் காப்பீட்டு திட்டம் என முயற்சிகள் எடுத்தாலும் ஏழை மக்கள் அதிகம் கட்டணம் செலுத்தாத வகையில் அவர்களுக்கு சேவை வழங்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button