தமிழகம்

முதல்வரின் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மக்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் பாசிமணி, ஊசி விற்பதுதான். இவர்களின் முழுநேரப்பணி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்ற போது சாப்பிட விடாமல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பானது.

அரசாங்கம் தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டு கல்யாண சாப்பாடு போடுற மாதிரி அடிச்சு விரட்டுறீங்க, நாங்க பாசிமணி, ஊசி விற்றுத்தான் வாழ்க்கை நடத்துறோம். எங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை. நாங்களும் மனுசங்க தானே எங்களை ஏன் விரட்டி அடிக்கணும், எங்க குழந்தைங்க படிக்கணும், எம்பிசி பட்டியலில் இருக்குற எங்களை எஸ்டி பட்டியலுக்கு மாத்தணும், எங்களுக்கு நிரந்தரமாக அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் வழங்கும் ரேசன்கார்டு, ஆதார் கார்டு, சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஸ்வினி என்ற பெண் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதனைக் கவனித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பெருமாள் கோவிலுக்கு நேரடியாகச் சென்று அங்கு நடந்த அன்னதானத்தில் வீடியோவில் பேசிய அஸ்வினியுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த காட்சிகளும், சமூக வலைதளத்தில் வைரலானது. அப்போது அமைச்சருடன் பேசிய அஸ்வினி கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எங்கள் சமூகத்தினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு சேகர்பாபு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவையடுத்து அதிகாரிகள் உடனடியாக மின்கம்பம் அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் என பூஞ்சேரி கிராமத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் பூஞ்சேரி கிராமத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு 4.53 கோடி மதிப்பில் 283 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சி நடந்த மேடையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அஸ்வினி பேசினார். அதனைத் தொடர்ந்து புதிதாகத் தயாரித்த பாசிமணி மாலையை முதல்வருக்கு அணிவித்தார். அஸ்வினியின் பேச்சை ஆர்வத்துடன் கவனித்த மு.க.ஸ்டாலின் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு கிளம்பினார்.

இதுசம்பந்தமாக அஸ்வினி பேசுகையில், முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வந்துட்டுப் போனதை வாழ்க்கையில் என்னைக்குமே மறக்க முடியாது. முதலமைச்சர் வரப்போறார்னு அமைச்சரும் அதிகாரிகளும் முன்னாடியே சொல்லிட்டாங்க. எங்களுக்கு கை, கால் எல்லாம் நடுக்கம் வந்துருச்சு.
நம்ம ஊர் தேடி முதல்வர் வர்றாருன்னா போன ஜென்மத்துல என்ன கொடுப்பினை பண்ணோம்னு நினைச்சு பெருமைப்பட்டோம். எந்த ஆதரவும் இல்லாம எங்க மக்கள் இருந்தாங்க. இப்ப பட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டைனு எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுக்கறாங்க. தண்ணீர் வசதி பண்ணிக் கொடுத்துருக்காங்க. ரோடு போட்டுக் கொடுத்துருக்காங்க. இதை நான் நினைச்சுக்கூட பார்க்கல.. எங்களுக்கு இப்படியெல்லாம் உதவி கிடைக்கும்னு எதிர்பார்க்கலை.

புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு வீடு கட்டித் தர்றோம்னு சொல்லி இருக்காங்க. தண்ணீர் குழாய் போட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். இந்த அரசாங்கம் யாருக்கும் எந்த குறையும் வைக்கலை. பக்கத்து ஊருக்கும் சேர்த்து செஞ்சு கொடுத்துருக்காங்க. எங்க தாத்தா, பாட்டன் காலத்துல ஒன்னுமே இல்லாம வாழ்ந்துட்டுப் போயிட்டாங்க. ஆனா எங்க காலத்துல எங்களுக்கு இவ்வளவு வசதிகள் கிடைச்சுருக்கு. அதனால் தான் முதல்வருக்கு அதே மேடையில் நன்றி சொல்லி பாசிமணி மாலை செஞ்சு போட்டோம்.

நீ கடவுள் மாதிரினு எங்க மக்கள் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு பெருமாளும், முதலமைச்சரும் தான் கடவுள், அவங்க மூலமாகத்தான் உதவி கிடைச்சது. எங்க மக்களும் உனக்காக கேட்காம எங்களுக்கும் சேர்த்து வாங்கி கொடுத்துருக்கனு சொல்லி எனக்கு மாலை போட்டாங்க. எங்க குடும்பத்துக்குனு சொந்தமாக வீடு இல்லை, நகை இல்லைனு சொல்லி வரதட்சணைக்கா என்னை என் கணவர் வீட்டார் கைவிட்டுட்டாங்க. உன்னை கல்யாணம் பண்ணி என்ன பிரயோசனம்னு என் மாமியார் சொன்னாங்க. அவங்க எல்லாம் இப்ப சென்னைல இருக்காங்க. அவரைக் கட்டாயப்படுத்தித்தான் கூட்டிட்டுப் போனாங்க. அவர் என்னை விட்டு போறத விரும்பல. இப்ப அவரையும் என்னோடு சேர்த்து வைக்க உதவி பண்றோம்னு சொல்லிருக்காங்க. நடக்குறதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப அதிசயமா இருக்குங்க என்று மகிழ்ச்சியுடன் போனார் அஸ்வினி.

இது சம்பந்தமாக அப்பகுதி நரிக்குறவர் இன இளைஞர்கள் கூறுகையில், எங்களுக்கு இந்த தீபாவளிதான் உண்மையான தீபாவளி. கடந்த 25 வருடங்களாக மின்சாரம், சாலை, குடிநீர் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தோம். இப்போது முதலமைச்சர் எங்களுக்கு அனைத்து வசதிகளையும், செய்து கொடுத்திருக்கிறார். எங்களுக்கு சாதிச்சான்றிதழ், பட்டா கிடைத்திருக்கிறது. எங்கள் குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடர முதலமைச்சர் உதவியிருக்கிறார் என்று ஸ்டாலின்தான் வர்றாரு.. விடியல் தரப் போராரு என்கிற பாடலுக்கேற்றவாறு எங்களுக்கு உண்மையான விடியல் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷத்துடன் கூறினார்கள்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button