எடப்பாடியில் பழுதடைந்த மின்மாற்றியை திருட முயன்ற கும்பல்
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைநாயக்கன்பாளையம் அம்மன் கோவில் எதிரில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மின்மாற்றியின் மின் இணைப்பு துண்டித்து வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த ஆறு பேர் கொண்ட திருட்டு கும்பல், நள்ளிரவில் மின்மாற்றியின் பெட்டியை கம்பத்தில் இருந்து கழற்றி அருகே உள்ள காலி இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு மின்மாற்றியை திறந்து காப்பர் தகடுகளை எடுக்க முயற்சித்த போது, பொதுமக்கள் சிலர் திருடர்களை பார்த்து விரட்டியுள்ளனர்.
ஆனால் திருட்டு கும்பல் தப்பியோடியது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்மாற்றியை கைப்பற்றிக் கொண்டு சென்றனர். இந்த துணிகர திருட்டு முயற்சி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை.
இதேபோல், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மின்வாரியத்திற்கு தெரியாமல் 2 மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்திருட்டில் ஈடுபட்டதாக முன்னாள் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.
முள்ளுகுறிச்சியை சேர்ந்த மின்வாரிய முன்னாள் ஒப்பந்த தொழிலாளரும், காய்கறி வியாபாரியுமான ரமேஷ், தன்னுடைய நிலத்தில் பிளாட் அமைத்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதற்காக அந்த நிலத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கே தெரியாமல் 2 புதிய மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஆயில்பட்டி காவல்நிலையத்தில் ரமேஷ் மீது முள்ளுகுறிச்சி மின்வாரிய அதிகாரி கிருஷ்ணன் புகார் அளித்தார். இந்தப் புகாரை பதிவுசெய்த காவல்துறையினர் ரமேஷை அழைத்து விசாரணை நடத்தியதில், தவறுசெய்ததை ஒப்புக்கொண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய 70 ஆயிரத்து 760 ரூபாயை ரமேஷ் செலுத்தியுள்ளார்.
சாதாரணமாக ஒருவரது வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மின்இணைப்பு எடுத்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்குமளவுக்கு மிரட்டும் மின்வாரியத்தினர், 2 மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்திருட்டில் ஈடுபட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவையான உபகரணங்களை மின்வாரியத்தில் மட்டுமே வாங்கமுடியும்.
இந்த உபகரணங்கள் தனிநபருக்கு எப்படி கிடைத்தது? இதில் மின்வாரியத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செந்தில்குமார்