கிடப்பில் போடப்பட்டதா? போடிபட்டி ஊழல் முறைகேடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையை அடுத்துள்ளது போடிபட்டி ஊராட்சி. 12 வார்டுகளை உள்ளடிக்கிய இந்த ஊராட்சியில் 8000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுண்டக்காபாளையம், போடிபட்டி ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சி ஊழலில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினீத் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது திருப்பூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போடிபட்டி ஊராட்சி தலைவர் கடந்த 23 ஆண்டுகளாக ஊராட்சி பணிகளில் குறிப்பாக மனை அங்கீகாரம் வழங்குவதில் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும், கடந்த 2001 ஆண்டு முதல் 2006 வரை போடிபட்டி ஊராட்சி தலைவர்களாக இருந்த மயில்சாமி, 2006 முதல் 2011 வரை தலைவராக இருந்த மல்லிகா சாமிநாதன், 2011 முதல் 2016 வரை தலைவராக இருந்த பாக்கியலட்சுமி மணி மற்றும் 2020 முதல் 2023 மே மாதம் வரை பதவியில் இருந்த சௌந்திர ராஜன் ஆகியோர் பதவியில் இருந்த கால கட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டு மனைப்பிரிவிற்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால் ஆதாரங்களின் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஊழலுக்கு துணைபோன ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
போடிபட்டி கிராமத்தில் 60 திற்கும் மேற்பட்ட மனைபிரிவுகள் அமைந்துள்ள போதிலும் 11 மனை பிரிவிற்கு மட்டுமே நகர ஊரமைப்புத்துறை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வழங்கப்பட்ட மனைப்பிரிவுகளிலும் பொது உபயோகத்திற்காக (Reserve Site) ஒதுக்குவதிலும், சாலை அமைப்பதிலும், தண்ணீர் தொட்டி கட்டுவதிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டுக்கள் முன்னிறுத்தி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சௌந்தரராஜன் வகித்து வந்த தலைவர் பதவியை நீக்கி நடவடிக்கை எடுத்ததோடு நின்றுவிடாமல் போடிபட்டி ஊராட்சிக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான வருவாய் இழப்பை மீட்டெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, காவல்துறை, நகர ஊரமைப்புதுறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து போடிபட்டி ஊராட்சி மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை ஆய்வு செய்து பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலைகளை ஆய்வு செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.