அனுப்பட்டி இரும்பாலை விவகாரம் –
48 மணி நேர கெடு முடிவுக்கு வருமா பத்தாண்டு போராட்டம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது அனுப்பட்டி கிராமம். இங்கு சுமார் 2000 பேர் வசித்துவருகின்றனர். இங்குள்ள மக்கள் அனுப்பட்டி கிராமத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு, விசைத்தறி தொழிலிலும் ஈடுபட்டுவருகின்றனர். பச்சை பசேல் என காட்சி அளிக்கும் இந்த கிராமம் கடந்த பத்தாண்டுகளாக தனது நிறத்தை இழந்துவருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் தனியாருக்கு சொந்தமான இரும்பாலை இங்கு அமைக்கப்பட்டது.இதற்கு அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில மாதங்கள் வரை நீடிக்கவில்லை. இரும்பாலையில் இருந்து வெளியேறும் புகை அருகில் உள்ள விளைநிலங்களில் படிவதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதோடு கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு நுறையீரல் புற்று நோயினால் பலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மேற்படி இரும்பாலையை உடனடியாக மூடக்கோரி கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அல்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த இரும்பாலைக்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்றியுள்ளனர். இருப்பினும் இரும்பாலை நிர்வாகம் விதிமுறைகளை மீறி இயங்கிகொண்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமையில் பல்லடம் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈசன், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் இரும்பாலையால் அனுப்பட்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தகவல் தரும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல் வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும், 48 மணி நேரத்தில் தகவல் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தகவல் அளிக்க மறுத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். 48 மணி நேரம் கெடு அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் விதித்துள்ளதால் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.