விவசாயம் – மீன் வளர்ப்பில் அசத்தும் பொறியியல் பட்டதாரி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம், மீன் வளர்ப்பு, தீவன சாகுபடி ஆகியவை மூலம் வருமானம் ஈட்டி அசத்துகிறார், பட்டதாரி விவசாயி. பனியன் கம்பெனி வேலையை உதறித்தள்ளி விவசாயத்தில் சாதித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்த போரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். ஜவுளித்துறை சார்ந்த பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர் துணிக்கடையிலும், பனியன் கம்பெனியிலும் பணியாற்றினார். இந்நிலையில் நஷ்டத்தால் கம்பெனி மூடப்பட்டதையடுத்து சொந்த ஊர் திரும்பிய அவர், மனம் தளராது விவசாயத்தில் ஈடுபட்டார். தரிசாக கிடந்த நான்கரை ஏக்கர் நிலத்தை நன்கு உழுது வயல்களாக மாற்றி நெல் சாகுபடி செய்துள்ளார். வேளாண் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நிலத்தின் ஒரு பகுதியில் பண்ணை குட்டை அமைத்து, விவசாயத்துக்கு பயன்படுத்துவதுடன், மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தாண்டு நன்கு பெய்த பருவ மழையால் பண்ணைக்குட்டை நிரம்பி விவசாயம் செழித்ததுடன், மீன் குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார். ஒரு மீன் குஞ்சு ஒன்றரை ரூபாய்க்கும், நன்கு வளர்ந்த மீன்களை கீலோ ரூபாய் 200 வரையிலும் வாங்கிசெல்வதாக தெரிவிக்கிறார், செல்வகுமார். தெளிப்பு நீர் பாசனம் மூலம் கீரை உள்ளிட்டவை பயிர் செய்துள்ளதோடு, கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பெறுவதாகவும், தற்போது நெல் அறுவடை ஒரு பகுதியில் முடிந்த நிலையில் கோ 51 ரக நெல் விதைப்பிலும் ஈடுபட்டு வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முறையான திட்டமிடலும் அயராத உழைப்பும் இருந்தால் விவசாயத்தில் செழிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார், செல்வக்குமார்.