வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அரும்பொருட்களுக்கான பயிற்சி பட்டறை
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு அரும்பொருட்களுக்கான பயிற்சி பட்டறை திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வரலாற்று துறை தலைவர் கற்பகம் முன்னிலை வகித்தார்.
திருச்சி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் பேசுகையில், மனிதகுல வரலாற்றையும் மனித இனத் தோற்றத்தின் தொல் பழங்காலம் முதல் மனிதனின் பரிணாம வளர்ச்சி, பண்பாடு, நாகரிகம், தொழில்கள் போன்றவற்றினை ஒவ்வொரு தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வரலாற்று பதிவுப் பெட்டகமாகத் திகழக்கூடிய முக்கிய இடம் அருங்காட்சியகம் ஆகும். நவீன காலத்தில் அரசுகளாலும் தனிநபர் அமைப்புகளாலும் பல்வேறு பொருண்மைகளைக் கொண்ட அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அருங்காட்சியகங்களைக் காண்பதற்காகவே மக்கள் சென்று தங்கள் வரலாற்று அறிவை மேம்படுத்திக் கொள்கின்றனர். மனிதகுல வரலாற்றில் அழிந்தவை போக எஞ்சியவற்றைக் காப்பது அரசின் கடமை மட்டுமல்ல, மக்களின் பொறுப்பும்கூட. உலக நாகரிகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் காண வேண்டுமென்றால் உலகிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் காணலாம். ஒரு நாட்டின் ஓர் இனத்தின் ஒரு சமூகத்தின் அடையாளங்களை நமக்குக் காட்டக் கூடிய ஆதாரங்களே அருங்காட்சியகங்கள் ஆகும் என்றார்.
அரும்பொருட்களுக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற வரலாற்று துறை மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சான்றிதழை வழங்கினார்.