பருத்தி கொள்முதல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு மற்ற மாவடங்களைவிட ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பின. இதனால் நெல், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் தானியப் பயிர்களை விவசாயிகள் விளைவித்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு (2019) பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்ட நிலப்பரப்பில், பாதியளவு பருத்தி விவசாயம் செய்துள்ளனர். இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது சுமார் 30 ஆயிரம் ஏக்கர் வரை பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், பரமக்குடி, பாண்டியூர், கமுதி, பெருநாழி, முதுகுளத்தூர், பொந்தம்புளி, காடமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிகளவு பருத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது.
வானம் பார்த்த பூமியில் உழவு, விதை, களை எடுத்தல், மருந்து அடித்தல் ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். அதேபோல், மோட்டார் பாசனம் மூலம் பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர் மழை காரணமாக பருத்தி விவசாயத்தில் பூச்சித் தாக்குதல் அதிகளவு இல்லை. இதனால் பருத்திச் செடிகள் தற்போது மகசூல் தரும் நிலையில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பருத்தி கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் பருத்தி கிலோ ரூ. 32 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்வதால், ஒரு கூலித் தொழிலாளிக்கு பருத்தி பறித்து தர ரூ. 200 சம்பளம் தர வேண்டும். ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 5 கிலோ வரை மட்டுமே பருத்தியை எடுக்க முடியும். இதனால், விளைந்துள்ள பருத்தியை எடுக்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில், கடந்தாண்டு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகளவு ஏற்பட்டது. இதனால், ஏராளமான விவசாயிகள் அதற்கு பதிலாக பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் தற்போது, பருத்தி மகசூல் தரும் சூழலில் உள்ளது. ஆனால், வியாபாரிகளோ கிலோ ரூ.32-க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பருத்தி பயிரிட்ட விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயி குடும்பத்தின் நிலை…
நெஞ்சைப் பத பதைக்கும் காட்சி!
திருப்பூர் மாவட்டத்தில் கடனை திரும்பப் பெற வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான குடும்பம் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகிப் பார்ப்பவர்களை உறையச் செய்கிறது.
கல்விக் கடன், விவசாயக் கடன், வீடு கடன், வீட்டிற்கு கடன், வாகனத்திற்கு கடன், கடனாகப் பெற ஒரு கார்டு(கிரெடிட் கார்டு) என வாடிக்கையாளர்களை தொல்லை செய்து, கடந்த சில ஆண்டுகளாக கடன்களை வாரி வழங்கி வரும் வங்கிகள், அதைத் திரும்பப் பெற குண்டாஸ்களை கொண்டு சட்ட விரோத போக்கைதான் கடைப் பிடிக்கிறது என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து, பார்ப்பவர்களை வேதனை அடைய செய்துள்ளது.
சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் வங்கியில் வாங்கியிருந்த கடன் தொகை கட்ட கால தாமதம் ஆகியுள்ளது. இதனால் அவரது சொத்தை வங்கி ஊழியர்கள் போலீஸார் துணையோடு ஈஸ்வரனின் சொத்துக்களை ஜப்தி செய்ய வந்துள்ளனர்.
நிலத்தை வருவாய்த்துறை, போலீசாருடன் பேங்க் ஆஃப் இந்தியா பறிமுதல் செய்ய வந்த நிலையில், ஈஸ்வரனின் மனைவி சித்ரா, மகன் பிரபு அவரது மனைவி இசையமுது ஆகியோர் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ந்துபோன போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்து அனைவரையும் காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வட்டாட்சியர் சிவசுப்ரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஈஸ்வரன் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- முத்துப்பாண்டி