தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? : சசிகலா விளக்கம்
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலா அதிமுக கொடியேற்றினார். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார்.
இதையடுத்து கல்வெட்டு ஒன்றையும் சசிகலா திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே சசிகலா ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். இதையடுத்து அங்குள்ள காது மற்றும் வாய் பேச முடியாத பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி, அவர்களுடன் சசிகலா மதிய உணவு உட்கொண்டார்.
ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார்.
அதில், நம் கட்சியினர் யாரும் பொதுக்கூட்டத்தில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம். கண்போன போக்கிலே கால் போகலாமா, கால்போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்ற எம்ஜிஆர் பாடல் இப்போது யாருக்கு பொருந்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இக்கட்டான சூழலிலும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி விட்டுத்தான் சென்றேன். நமக்கு ஒற்றுமைதான் முக்கியம் நீர் அடித்து நீர் விலகாது கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் அதிமுக என்னும் ஆல மரத்திற்கு எம்ஜிஆர் விதையாக இருந்தார், ஜெயலலிதா மழை யாக இருந்தார். என்னால் இந்த இயக்கத்திற்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட கூடாது என்று தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தேன் என்றார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
– நமது நிருபர்