![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/02/Tiruppur-villagers-complain-of-Wakf-Board-claiming-land-ownership-780x470.jpg)
திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்வர்ராஜாவுக்கு தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் பதவியையும் வழங்கினார். அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அமைந்ததும், அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வரைமுறை இல்லாமல் பணத்தைச் சுருட்ட ஆரம்பித்தனர்.
இதற்கு அன்வர்ராஜாவும் தனது பங்குக்கு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தைப் பயன்படுத்தி பல முறைகேடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த சமயத்தில் வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க முடிவு செய்து கல்லூரியின் நிர்வாக குழுவில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/02/202111302304523823_Former-minister-Anwar-Raja-fired-from-AIADMK_SECVPF_sp.jpg)
அதன்பிறகு மதுரை வக்ஃபு கல்லூரியின் செயலாளராக இருந்த ஜமால் முகைதீன், கல்லூரிக்கு எதிரே இரும்பு வியாபாரம் செய்யும் வழக்கறிஞர் ஷேக் அப்துல்லா, ஏற்கனவே பலமுறை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்த டாக்டர் அமானுல்லா, உள்ளிட்ட நிர்வாகிகள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மாமனார் மூலம் அமைச்சரிடம் பேசி 86 உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 37 பதவிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபிலுக்கு தலா 10 லட்சம் கொடுப்பதாக செயலாளர் ஜமால் முகைதீன் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் கொடுத்தும் உள்ளனர்.
அதேபோல் செயலாளர் ஜமால் முகைதீன், செய்யது, ஷேக் அப்துல்லா, டாக்டர் அமானுல்லா, HMT கான் ஆகியோர் 71 நபர்களுக்கு தலா 60 லட்சம் வீதம் வசூலித்துக் கொண்டு பணியிடங்களை நிரப்பியுள்ளனர். இதில் டாக்டர் அமானுல்லாவின் பதவியைப் பயன்படுத்தி அவரது மகன் கனிதான் நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். உதாரணத்திற்கு உதவிப் பேராசிரியர் பணிக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கிய பதவிக்கு அவரிடம் பணம் இல்லாததால் அவரது வீட்டுப்பத்திரத்தை கனி வாங்கி வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக கல்லூரியின் செயலாளர் ஜமால் முகைதீன் அறையில் ஜமால் முகைதீன், அமானுல்லாவின் மகன் கனி உள்ளிட்டோர் விவாதிக்கும் வீடியோ, ஜமால் முகைதீனின் கார் ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்து காரில் வைக்கச் சொல்லி, அவரும் காரில் வைப்பது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. அதன்பிறகு கனி, ஜமால் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆடியோக்களும் வெளிவந்தன. இவற்றில் சில வீடியோக்களும், ஆடியோக்களும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முக்கியமான அதிகாரியிடம் தற்போது பத்திரிகையாளர் ஒருவர் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. மேலும் முக்கியமான 3 வீடியோக்களும், சில ஆடியோ உள்ளிட்ட பேப்பர்களை சிபிஐ டைரக்டர் ஜெனரலிடம் நேரில் வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளன.
இது சம்பந்தமாக அப்போதைய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், வக்ஃபு வாரியத் தலைவராக இருந்த அன்வர்ராஜா, கல்லூரியின் செயலாளர் ஜமால் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் நிலோபர் கபில், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகிய இருவரும் ஆளும் கட்சியில் உயர்பதவியில் இருப்பதால், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பது உகந்ததாக இருக்காது. ஆகையால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2023/02/images_sp.jpg)
இது சம்பந்தமாக நமது நாற்காலி செய்தி குழுவினர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பல்வேறு கட்டங்களில் புலனாய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டி நமக்கு கிடைக்கப் பெற்ற வீடியோ, ஆடியோவில் உள்ள முக்கியமான தகவல்களை செய்திகளாக வெளியிட்டிருந்தோம். அதனை சிபிஐ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, வக்ஃபு கல்லூரியின் செயலாளராக இருந்த ஜமால் முஹம்மது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வில்சன் மூலமாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் ஹேமா, அன்றைய காலகட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்களை விசாரணை செய்ய அப்போதைய முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. அரசுத் தரப்பில் பதில் அனுப்பாமல் காலம் தாழ்த்தினர். அதன்பிறகு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பதில் தரவில்லை. அன்வர் ராஜா பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்ததால் பாராளுமன்ற மேலவை தலைவருக்கும் கடிதம் அனுப்பி அனுமதி கோரப்பட்டது. பதில் வராததால் அவர்களை விசாரணை செய்யவில்லை.
இந்த வழக்கில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 86 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 37 பதவி நியமனத்தில், தவறு செய்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இந்த நிர்வாகத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் டாக்டர் அமானுல்லா. அவர் பலமுறை தலைவராக இருந்துள்ளார். ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார்.
பின்னர் வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் இந்த வாழ்க்கை ரத்து செய்ய இயலாது. வழக்கை விரைவாக விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். நிதி மன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் அந்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நிதிபதிகளிடம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டும் சிபிஐ அதிகாரிகள் இன்னும் நிலோபர் கபில், அன்வர் ராஜா, ஜமால் முகைதீன், அமானுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆயத்தமானதாக தெரியவில்லை.
இந்த வழக்கு சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க இருப்பதாக தெரியவருகிறது.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைப்பதோடு, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.
– சூரியன்