பரமக்குடி அருகே பழமையான உறை கிணறு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் ஸ்ரீ ராக்கப்பெருமாள் கோவில் பணிக்காக மண் அள்ளிய போது மண்ணில் புதைந்த நிலையில் உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.
உறை கிணற்றின் 4 அடுக்குகள் மட்டும் தற்போது மேலே தெரியும் நிலையில் மேலும் பல அடுக்குகள் மண்ணுக்குள் புதைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உறை கிணறு 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றும், இப்பகுதி கீழடியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருப்பதால் கீழடி போன்று வைகை நாகரீகத்தின் தொடர்ச்சியாக இருக்க கூடும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு பெரிய அளவில் ஏராளமான செங்கற்களும், சில மண்பாண்ட பொருள்களும், மனித எலும்புகளும் சிதைவடைந்த நிலையில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது..
பாம்புவிழுந்தான் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் ஆன மற்றும் ஒரே கல்லில் வடிவமைக்கபட்ட முழு உருவ பெண் சாமி சிலைகள் கண்டறியப்பட்டதாகவும், எனவே தொல்லியல்துறை உடனடியாக அகழாய்வு பணிகளைத் தொடங்கி தமிழர்களின் பழமையான நாகரீகத்தை, வெளி கொண்டுவர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
–ராஜா