எம்ஜிஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா..
எச்சரிக்கும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள்!
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையிலான மோதல் ஆரம்பித்து நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்து அறிக்கை விடுத்துள்ளனர்.
ஈவிகேஎஸ் இங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.சி.வி. சண்முகம், ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநாவுக்கரசர் குறித்த ரகசியங்களை வெளியிடுவோம் என எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராகுல் காந்தியின் ஆணையின்படி மோடி அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நினைவூட்டி கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இளங்கோவனின் அரசியல் பாரம்பரியம் பற்றி விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.
சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வே.கி. சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு தகுதி இல்லை. பச்சைத் தமிழர் காமராஜரை இன்னும் 10 ஆண்டுகளுக்கு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து காங்கிரஸ் பேரியக்கத்தை ஓங்கி நிற்கச் செய்தவர் தந்தை பெரியார்.
தனது கவுரவம் பாதிக்கப்பட்ட போது, தன்மானம்தான் பெரிது என எண்ணி திராவிட கொள்கைகளை துறந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்த சம்பத் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக – பொதுச் செயலாளராக பணியாற்றி பட்டி தொட்டியெங்கும் தனது சொல்லாற்றலால் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர்.
சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தில் பிறந்து மறைந்த பல தியாகிகளை உலகம் உள்ளவரை அனைவரும் போற்றும் வண்ணம் தனது நடிப்பால் உயிரோட்டம் கொள்ளச் செய்தவர் சிவாஜிகணேசன், காங்கிரஸ் பேரியக்கமே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர். அவரைக் கொச்சைப்படுத்தி பேசுவதை உண்மையான எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்கமாட்டான்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல். பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களது வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர். இளங்கோவன் மீது இனி மேலும் இது போன்ற தரமற்ற விமர்சனங்களை செய்தால் இவர் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும் என்று கூறியுள்ளனர்.