இயக்குனர், தயாரிப்பாளர், பெப்சி நிர்வாகி என பல முகங்களில் உள்ள இவருக்கும் செண்டிமெண்ட்டுக்கும் அவ்ளோ ஏழாம் பொருத்தம். இந்த இயக்குனர் எப்போதும் தன் தலைமையில் தான் எதையும் நடத்த வேண்டும் என விரும்புவார் அது கல்யாணம் ஆனாலும், கண்டன கூட்டமானாலும்… அதைப்போலவே பதவியில்லாமல் ஒரு நாளும் இருக்க மாட்டார். ஏதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் பதவியில் தொடர்ந்து கொண்டே இருப்பார்.
தமிழ் தமிழ் என மேடைக்கு மேடை பேசிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் ஐதராபாத்திலேயே வாசம் செய்வார்.
இவர் தலைமையில் செயல்படும் சங்கங்கள் ஒன்று அங்கீகாரததை இழக்கும் அல்லது பஞ்சாயத்து என கோர்ட்டுக்கு போகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு படைப்பாளிகள் சங்கம் தொடங்கப்பட்டது. அதிலும் இவர் பதவியில் இருந்தார். அந்த சங்கம் தொடங்கிய வேகத்தில் மூடப்பட்டது. அதற்காக வசூலிக்கப்பட்ட தொகை என்ன ஆனதென்றே தெரியாது. அதே போல தமிழ்திரை என்ற சேனல் அறிவிப்பு. அதற்கும் பல கோடிகள் வசூல் ஆனது. கடைசியில் அதுவும் இழுத்து மூடப்பட்டது. வசூலிக்கப்பட்ட தொகை மாயம். அங்கேயும் முக்கிய பதவியில் இருந்ததும் இவரே…
பின்னர் இயக்குனர் சங்கத்தில் பதவிக்கு வந்தார். வந்த வேகத்தில் சங்கத்தின் அங்கீகாரத்தையே விட்டுவிட சங்கப் பெயரே ரத்தாகிப் போனது. அப்படி சங்கம் ரத்தானதை மறைத்து பெப்சி தேர்தலில் நின்று அங்கும் பதவியை பெற்றார். இதை எதிர்த்து தனியாக ஒரு வழக்கும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் பல மாதமாக சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
பெப்சி தலைமையில் ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்ட மறு நாள் ஜெயலலிதா மறைவு செய்தி அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சசிகலாவை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்த நேரத்தில் இதே இயக்குனர் தலைமையில் பல சினிமா பிரபலங்கள் போயஸ்கார்டனுக்கு போய் சசிகலாவை சந்தித்து “சின்னம்மா தான் அடுத்த முதல்வர்” என வாழ்த்தி வந்த மறு நாள் ஊழல் வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த செண்டிமெண்ட்டில் சிக்கிய பிரபலம் வேறு யாருமல்ல இயக்குனர் ஆர்.கே.செல்வமணிதான்.
இந்த சூழலில் வருகின்ற 24ம் பெப்சி நடத்தும் ஒரு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செண்டிமெண்ட் இந்த விழாவுக்கு பிறகு கண்டிப்பாக நடக்கும் என்று ஒரு சாராரும், சே.. சே.. அப்படி எல்லாம் நடக்காது என்று ஒரு சாராரும் பந்தயம் கட்டி வருகிறார்களாம்.
காரணம், இதற்கு முன்பு அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குணமடைய சிறப்பு யாகம் நடத்திய மறு நாள் அவர் மறைவு அறிவிக்கப்பட்டது. அதே போல சின்னம்மா சசிகலாவுக்கு இவர் தலைமையில் போய் ஆதரவு தெரிவித்த மறு நாள் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது அதிமுக அரசின் மீது கடும் விமர்சனங்கள் இருக்கும் நிலையில் இந்த அரசு அதிக நாள் நீடிக்காது என்றும் அதற்கு காரணமாக 18 எம்.எல்.ஏ&க்கள் வழக்கின் தீர்ப்பு, முதல்வர், துணை முதல்வர் இடையிலான பனிப்போர் என பல காரணங்களை சொல்லி வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் ஆர்.கே.செல்வமணி நடத்தும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகத்திலும், செண்டிமெண்ட் விவகாரத்திலும் அதிகம் கவனம் எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கவனத்திற்கு செல்வமணி செண்ட்மெண்ட் சென்றுள்ளது.
இதையடுத்து விழாவில் கலந்து கொள்வது குறித்து இதுவரை முதல்வர் தரப்பில் உறுதி செய்யப்படவில்லையாம்.
– கோடங்கி
கலைஞர் நினைவஞ்சலியை
புறக்கணித்த செல்வமணி
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி எப்போதும் தமிழ் தமிழ் என மேடைக்கு மேடை முழங்கினாலும் தொடர்ந்து தமிழ் புறக்கணிப்பு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். உலக தமிழர்களின் தலைவர் என்றும், முத்தமிழ் அறிஞர் என்றும், நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர் என்றும், 5 முறை ஆட்சியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு நாடுமுழுவதும் உள்ள பல மாநில முதல்வர்கள், பிரதமர், ஜனாதிபதி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது கடைசி அஞ்சலியை செலுத்தினார்கள்.
ஆனால், சினிமா துறையின் மூத்த உறுப்பினர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து சினிமா சங்கங்களை இணைக்கும் பெப்சியின் தலைவர் செல்வமணி போகவில்லை. அதன் பின் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திலும் பெப்சி தலைவர் செல்வமணி கலந்து கொள்ளாமல் ஏன் புறக்கணிப்பு செய்தார் என்பது தெரியவில்லை. அதே நேரம் 24ம் தேதி தன் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆளும் அதிமுக முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ள நேரம் கேட்ட நிலையில் திமுக தலைவர் கலைஞர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சிக்கலாகும் என யோசித்தாரோ என்னவோ…