செல்போன் ரூ. 2000 : மோசடி கும்பலுக்கு துணைபோகும் தபால்துறை..?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலமாக கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்டவில்லை. நோயின் தீவிரம் சற்று குறைந்ததற்கு பிறகு அப்போதைய அதிமுக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி பயில ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆன்லைனில் கல்வி பயில ஆண்ட்ராய்டு செல்போன்கள் தேவையாக இருந்தது. கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில் ஆண்ட்ராய்டு செல்போன் வசதி இல்லாத நிலையே அப்போது இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி இருந்ததால் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
இந்நிலையில் தங்கள் குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்கிற அக்கறையில் தங்களிடம் உள்ள பொருள்களை அடமானம் வைத்தோ, விற்றோ தங்களது குழந்தைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்து கல்வி பயில ஏற்பாடு செய்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு செல்போன் ஆன்லைனில் விற்பனை செய்வதாக ஒரு கும்பல் விளம்பரம் செய்து கிராமத்து அப்பாவி பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியது.
குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு செல்போன் கிடைக்கிறதே என்ற ஆசையில் அப்பகுதி மக்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள். அந்த விளம்பரம் செய்த மோசடி கும்பல் ஆர்டர் செய்தவர்கள் முகவரிக்கு தபால் நிலையங்கள் மூலம் பார்சல்களை அனுப்பி பணத்தை கொடுத்து பார்சல்களை பெற்றுக்கொள்ளுமாறு அனுப்பி வைத்திருக்கிறார்கள். குறைந்த விலையில் அதாவது 20,000 மதிப்புள்ள செல்போன் 2000 க்கு கிடைக்கிறதே என்ற ஆசையில் ஆர்டர் கொடுத்த பொதுமக்கள் தபால்நிலையங்களில் பணத்தை கட்டி பார்சல்களை பெற்றுக்கொண்டு பிரித்து பார்த்தால் செல்போன் பவர் பேங் பாக்ஸ்களில் களிமண் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்திருக்கிறார்கள்.
மேலும் சில பார்சல்களில் களிமண் உருண்டை, கேபிள் வயர், கம்பி, பித்தளை விளக்குகள் போன்ற பொருட்களும் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தபால் நிலையத்திற்கு சென்று விசாரித்தால் ஏமாந்தவர்களை பரிதாபமாக பார்க்கும் தபால் நிலைய அலுவலர்கள் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று தட்டிக்கழித்து வருகிறார்களாம்.
பொதுமக்கள் தபால்நிலையங்கள் மூலம் பார்சல் புக்கிங் செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட தபால்நிலைய அதிகாரி வாடிக்கையாளரிடம் என்ன பார்சல் புக்கிங் செய்யப்பட உள்ளது எனக்கூறி பார்சலை திறந்து காண்பிக்கச் சொல்வார்கள். அதன்பின்னரே பார்சலை புக்கிங் செய்வார்கள். பார்சல் மீது உள்ளே என்ன பொருட்கள் உள்ளது என விபரம் குறிப்பிடப்பட வேண்டும். இது தபால் துறையின் விதி. தபால் துறை அலுவலகங்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
பேரணாம்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி கவர்ச்சிகரமாக குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக பொதுமக்களை ஏமாற்றிவரும் கும்பல் பற்றி வேலூர் மாவட்ட காவல்துறையில் புகார்கள் கொடுததும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். தபால்நிலைய அலுவலர்கள் இந்த மோசடி கும்பலுக்கு துணையாக இருப்பதால் தான் செல்போன் மோசடி கும்பல் இன்னும் ஏமாற்றி வருகிறார்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து தபால் துறையானது உடனடியாக விசாரணை நடத்தி போலி நிறுவனங்கள் அனுப்பிவரும் பார்சல் புக்கிங்கை தடுக்க வேண்டும். தபால்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் மோசடி கும்பல் மீதும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
– நமது நிருபர்