“பில்டிங் ஸ்ட்ராங்கு – பேஸ்மெண்ட் வீக்கு”… : பல்லடம் நகராட்சியின் பரிதாப நிலை
திருப்பூர் மாவட்டத்தின் பிரதானமாக விளங்கி வரும் நகராட்சிகளில் பல்லடம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழில்களாக திகழ்ந்துவருவது கோழிப்பண்ணை மற்றும் விசைத்தறி தொழிலாகும்.
மேலும் பல்லடம் நகராட்சி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் தென்மாவட்டங்கள் மற்றும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக திகழ்ந்துவருகிறது.
இதனிடையே பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் வீட்டு வரி, குடிநீர் இணைப்பு மற்றும் வீடு கட்டுவதற்க்கான கட்டிட அனுமதி உள்ளிட்ட அனைத்து விதமான தேவைகளையும். பல்லடம் நகராட்சியை அணுகி பெற்றுவந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புதியதாக கட்டிடம் கட்டி அனுமதி பெற நகரமைப்பு ஆய்வாளரை பொதுமக்கள் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக தற்காலிகமாக ஆய்வாளர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் நகராட்சிக்கு வந்து செல்கின்றனர். தற்போது காங்கேயத்தில் இருந்து ஆய்வாளர் செவ்வாய் கிழமை தோறும் வந்து செல்கிறார். சந்திக்கும் நேரம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்படாததால் பெரும்பாலானோர் காலை முதல் மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆனால் மறுதினம் மாலை சுமார் ஒரு மணி நேரம் வந்து சென்றதாக ரகசிய தகவல் பரவும், தகவல் கிடைத்து வந்து பார்ப்பதற்குள் ஆய்வாளர் வந்த சுவடு தெரியாமலே சென்றுவிடுவார். இதனால் புதிதாக இடம் வாங்குவோர், வீடு மற்றும் தொழில்சாலை கட்டிடம் கடுவோர் கட்டிடம் கட்டும் ஆசையை தொலைத்துவிட்டு விரக்தியில் உள்ளனர்.
பல்லடத்தை அடுத்துள்ள பொள்ளாச்சியில் மூன்று நகரமைப்பு ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதிகளவு வருமானம் கொழிக்கும் பல்லடம் நகராட்சிக்கு நிரந்தர நகரமைப்பு ஆய்வாளரை பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னதான் பல்லடம் நகராட்சியின் பணிகள் ஸ்ட்ராங்காக நடந்துகொண்டிருந்தாலும் கட்டிட அனுமதி வழங்கும் விவகாரத்தில் பேஸ்மெண்ட் வீக்காக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பல்லடம் நகராட்சி பொதுமக்களின் நிம்மதியான வீடு கட்டும் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.