தமிழகம்

சேலம் ரயில் கொள்ளை: வங்கி அதிகாரிகள் உடந்தையா ?

கடந்த 2016, ஆகஸ்ட் 8.ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, கொள்ளையர்கள் ரூ.5.78 கோடியை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார், இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். மேலும், மத்தியப் பிரதேசம் குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் மோகர் சிங், ருசி பார்தி, கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, பில்டியா ஆகியோரை கடந்த 30 -ஆம் தேதி கைது செய்து, விசாரணை செய்து வந்தனர்.


விசாரணையில், “மோகர்சிங்குக்கு கிரன், சங்காராம், ரசி, மகேஷ், பாசு, ஆமீன், தாராம் என்ற 7 சகோதரர்களும் கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். மேலும், ஆதாய கொலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு தலைவனாக இருந்த கிரேனை காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
இதன் பின்னர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் மோகர்சிங் சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர். தங்களை பற்றி காவல்துறைக்கு தகவல் அளித்ததாக கூட்டாளி இருவரை கொலை செய்துவிட்டு மோகர் சிங் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த 2016 -ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த மோகர்சிங் விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் ஆகியப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்வே தண்டவாளம் அருகில் வசித்து வந்துள்ளார்.
அப்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதை அறிந்த மோகர்சிங், இதற்காக சேலம்- சென்னை இடையே பலமுறை ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது சின்னசேலம் – விருத்தாசலம் இடையே 45 நிமிடம் ரயில் மிகவும் மெதுவாக செல்வதை நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து, சம்பவம் நடந்த அன்று சின்னசேலம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது என்ஜின் பகுதி வழியாக ஏறிய மோகர்சிங் தரப்பினர், சரக்குப் பெட்டிக்கு சென்றுள்ளனர். பேட்டரி கட்டர் மூலம் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். பணத்தை லுங்கிகளில் மூட்டையாக கட்டி வெளியே எடுத்து வந்துள்ளனர்.
விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு அருகே வயலூர் பகுதியில் ரயில் வந்தபோது, ஏற்கெனவே திட்டமிட்டபடி பணத்தை ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர்.அப்போது தயாராக இருந்த மற்றொரு கும்பல், பண மூட்டைகளை எடுத்து சென்றுள்ளது. இதையடுத்து மோகர்சிங் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம், ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், அந்த நோட்டுக்களை தீயிலிட்டு எரித்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிசிஐடி, இந்த வழக்கில் உதவி செய்த போபால் காவல் ஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு சிபிசிஐடி சிறப்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
சேலத்தில் இருந்து ரயில் மூலம் பணம் எடுத்துச் செல்வது குறித்து, ஒரு மாதத்துக்கு முன்பே கொள்ளையர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னரே அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். பணபரிமாற்ற விவரம் குறித்து சேலம், நாமக்கல் மாவட்ட வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த தகவல், கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து வங்கி அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என சிபிசிஐடி போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  • வெங்கடேசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button