தமிழகம்

கல்லூரி மாணவர்கள் கையில் கள்ளத்துப்பாக்கி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக் கொண்டனர். இந்த விவகாரத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் பல்கலை கழக வளாகத்தில் அமைந்துள்ள கேண்டீனுக்கு சென்ற மாணவர்கள் இரண்டு குழுக்களாக அமர்ந்திருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில் மாணவர் ஒருவர் சகமாணவரை கத்தியைக் காட்டி தாக்குதல் நடத்த மாணவரை துரத்தினார். மற்றொரு மாணவர் கையில் கள்ளத்துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தினார். இதனால் அங்கு கூடியிருந்த சகமாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்டதை வேடிக்கை பார்த்த சகமாணவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்தது எப்படி என்கிற கேள்வி அந்த வீடியோவை பார்த்த அனைவர் மனதிலும் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மோதல் வீடியோ குறித்து தகவல் அறிந்த காட்டாங்குளத்தூர் காவல்துறையினர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று விசாணை நடத்தி வீடியோ காட்சிகளில் பதிவான மாணவர்களை தேடிவந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வீடியோவில் அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்க முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக நீதிபதி மாணவர்கள் அனைவரையும் எச்சரித்து ஜாமீனில் விடுத்தார்.

கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் பல்கலை கழக வளாகத்திற்குள் மோதலில் ஈடுபட்டதைப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

& உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button