இந்திய அரசியலில் பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜருக்கு ஜூலை 15 அன்று 118வது பிறந்தநாள். நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு என அருந்தொண்டாற்றிய தலைவரை நினைவுகூர்கிறோம்.
கரிசல் காடும், கருவேல மரமும், காகமும், கரிச்சான் குருவிகளும் கொண்ட தென் தமிழகத்தின் அன்றைய காலத்தில் அதிகம் அறியப்படாத விருதுபட்டியில் பிறந்தவர் காமராசர். சிறுவயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்திலும், பொதுத் தொண்டிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
ராஜாஜிக்குப் பிறகு 1954ம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் காமராஜர். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் மூடப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறக்கச் செய்தார். ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை பத்தே ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்தது. தனக்கு வாய்க்காத கல்வியை, ஏழைக் குழந்தைகளும் இழந்து விடக்கூடாது என்ற பேராவலுடன் திரும்பிய திசையெங்கும் கல்வி நிலையங்களைத் திறந்தார் காமராஜர். அதோடு நின்று விடாமல் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் செயல்படுத்திய செயல் வீரர் காமராஜர்.
நெய்வேலி நிலக்கரித் திட்டம், ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’ உள்பட மேலும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி, அன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வாரி வழங்கினார் காமராசர். இதனால் அவரின் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர். கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம், பவானி அணை என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களையும் வடிவமைத்து பாசனத் திட்டங்களுக்கு முன்னோடித் தலைவராக இருப்பவரும், இருந்தவரும் காமராசர்தான்.
பிரதமர் பதவி தம்மைத் தேடி வந்தபோதும், லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திராவையும் பிரதமராக்கி கிங் மேக்கராக வலம் வந்தார் காமராஜர். தள்ளாத வயதிலும் தளராது உழைத்த அந்த மாமேதை 1975ம் ஆண்டில் 72வது வயதில் காலமானார். அடுத்த ஆண்டே அவருக்கு இந்திய தேசியத்தின் உயர்ந்த விருதான பாரத ரத்னாவை வழங்கி அரசு அழகு பார்த்தது. ஆனால் விருதுகளுக்கெல்லாம் உயர்ந்த விருதுபட்டிக் காமராசர் அல்லவா அவர்…
கடைசி வரை தூய அரசியல் வாழ்வு வாழ்ந்தவர் காமராஜர். அவர் தொடங்கிய கல்விச் சாலைகளும், அவர் தொடங்கிய நீர்ப்பாசனத் திட்டங்களும் என்றென்றும் அவரின் பெருமையை திக்கெட்டும் பறைசாற்றும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
& கா.ரபீக் அகமது