பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சமூக நீதியை நாசப்படுத்திவிடும் : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
அதன் விவரம்:
“முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதும் அதை நாசப்படுத்திடக் கூடியதுமான செயலாகும்.
மத்திய அரசின் இந்த முடிவு நீதிமன்றப் பரிசீலனைக்கு முன் நிச்சயமாக நிற்காது. அரசியல் சட்டத்தின் 15 (4) மற்றும் 16 (4) ஆகிய பிரிவுகளின்படி சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இதே சடப்பேரவையில், 12.5.1989 அன்று முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி – அதன் அடிப்படையிலும், கருணாநிதி கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அன்றைக்கு பிரதமராக இருந்த வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்தார்.
அதையடுத்து, திமுக பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் அர்ஜுன் சிங் முயற்சியினால் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்புகளில், இட ஒதுக்கீடு மத்திய அரசு அலுவலகங்களில் இதுவரை முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை வஞ்சித்து வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாகியும் குரூப் ‘ஏ’ பிரிவில் 17 சதவீதமும், குரூப் ‘பி’ பிரிவில் 14 சதவீதமும், குரூப் ‘சி’ பிரிவில் 11 சதவீதமும், குரூப் ‘டி’பிரிவில் 10 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மண்டல் கமிஷன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல – மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ரத்து செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன், “பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று தீர்ப்பளித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன்ரெட்டி, சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
ஆகவே ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, அரசியல் சட்டத்திற்கு மாறாக இப்படியொரு இட ஒதுக்கீட்டை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொண்டுவந்து மத்திய பாஜக அரசு, பணியில் சேரும் உரிமை வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் வாழ்வுடன் விபரீத விளையாட்டைத் தொடங்கியிருக்கிறது.
ஆகவே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் தமிழகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். பெரியார் – அண்ணா – காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழக சட்டப்பேரவையிலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க எண்ணும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை இன்றே நிறைவேற்றிட வேண்டும்“.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.