தமிழகம்

ஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..! கொள்ளையன் கொடுத்த வாக்குமூலம் !

சென்னை பம்மல் சங்கர்நகரை சேர்ந்த சாமுவேல் ஜேக்கப் என்பவர் வணிகர் சங்க பேரமைப்பில் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் தனது தாய் டோரா ஐசக் மற்றும் குடும்பத்தினருடன் செப்டம்பர் 8ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சி.எஸ்.ஐ தேவாலயம் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சாமுவேல் ஜேக்கப், தனது குடும்பத்தினரின் 115 சவரன் நகைகளும், பீரோவில் தாய் சேமித்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளை போயிருப்பதாக போலீசில் புகார் அளித்தார். கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

சம்பவத்தன்று சந்தேகத்துக்கிடமான நபர்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளை நடந்த நேரத்தில் சாமுவேல் ஜேக்கப் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல் வாகனத்தை அடையாளம் கண்ட காவல்துறையினர் அந்த வாகனத்தை வைத்து கொள்ளையனை அடையாளம் கண்டனர். கைலி கட்டிக்கொண்டு தலையில் ஹெல்மெட்டுடன் வலம் வந்த அவன் சென்ற இடங்களில் எல்லாம் பதிவான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தின் பின்னால் பாரத் டிவிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கொண்டு அது திருப்பூரில் விற்பனை செய்யப்பட்ட வாகனம் என்பதையும் கண்டு பிடித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த வாகனத்தை லட்சுமணன் என்ற நபர் ஆரோக்கிய ஜான்ஜோசப் என்பவருக்கு விற்பனை செய்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

ஆரோக்கியம் என்ற பெயரில் பழைய குற்றவாளிகள் உள்ளனரா என்று ஆய்வு செய்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள ஏ.கே.எஸ் நகைகடையில் 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த இருவரில் ஒருவன் ஆரோக்கியம் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஆரோக்கியத்தை பிடித்து விசாரித்த போது கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டு, பணத்தை எல்லாம் செலவழித்து விட்டதாக கூறி கதை அளந்துள்ளான். கொள்ளையடித்த அன்று அதிகாலையில் ஆண்டவரை நினைத்துக் கொண்டு தன்னுடைய வாகனத்தில் சாமுவேல் ஜேக்கப்பின் வீட்டின் வழியாக சென்றபோது, அவர் வணிகர் சங்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதாக பெயர் பலகை வைக்கப்பட்டிருந்ததால் வீட்டில் நிறைய பணம் இருக்கும் என்று அங்கேயே உறங்குவது போல படுத்து கொள்ளைக்கு திட்டமிட்டு உள்ளான்.

காலையில் அனைவரும் தேவாலயத்துக்கு சென்றபின்னர் வீட்டுக்குள் செல்லலாம் என ஆரோக்கியம் காத்திருந்தபோது, புல்டாக் ஒன்றை வாசலில் கட்டி விட்டுச் சென்றுள்ளார் சாமுவேல் ஜேக்கப். இதையடுத்து நாய்க்கு ஒரு குவளையில் தண்ணீர் வைத்ததும் அது தன்னை கண்டு கொள்ளாமல் தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்தவே பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளான்.

பீரோவை திறந்து பார்த்தால் கட்டு கட்டாக 100 ரூபாய் 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்ததாகவும், ஆண்டவர் தனக்கு அளித்த பரிசாக நினைத்து மொத்தமாக அள்ளிச்சென்றதாகவும் கொள்ளையன் ஆரோக்கியம் தெரிவித்துள்ளான்.

ஜேக்கப் வீட்டில் 48 சவரன் நகை மட்டுமே இருந்ததாகவும் 115 சவரன் என்று பொய்யாக புகார் அளித்துள்ளதாகவும் கொள்ளையன் போலீசாரிடம் தர்க்கம் செய்துள்ளான். மேலும் கொள்ளையடித்த பணத்தில் 2 லட்சம் ரூபாயை தன்னை ஜாமீனில் எடுப்பதற்காக வழக்கறிஞர் ஒருவருக்கும், 10 லட்சம் ரூபாயை பால் வியாபாரம் பார்த்துவரும் தனது தந்தையின் தொழில் மேம்பாட்டுக்காக அள்ளிக்கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் கொள்ளையன் ஆரோக்கியம் என்கின்றனர் காவல்துறையினர்.

அதோடில்லாமல் கொள்ளையடித்த பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயை வட்டிக்கு விட்டதாகவும், காலில் அணிய புத்தம்புது ஷூக்கள், பிராண்டட் சட்டைகள் என லட்சம் ரூபாய்க்கு வாங்கி குவித்ததாகவும் கணக்கு காட்டியுள்ளான், ஆண்டவர் அருளால் திடீர் லட்சாதிபதியானதாக சொல்லும் ஆரோக்கியத்திடம் இருந்து இறுதியில் 23 லட்சம் ரூபாய் பணம், 48 சவரன் நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவன் மீது ஏற்கனவே கொலை மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிக பணத்தை வீட்டில் வைத்து செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வீட்டின் முன்பக்கமும் பின்பக்கமும் பாதுகாப்புக்கு நல்ல இரும்பு கதவுகளை அமைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  • சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button