புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னான் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
புளியந்தோப்பு குடியிருப்பு தொடர்பாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
அதனைத்தொடர்ந்து பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கே.பி.பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த கட்டிடம் 2018 இல் தொடங்கப்பட்டு 2019-ல் முடிக்கப்பட்டது.
தொட்டால் சினிங்கி பார்த்திருக்கிறோம் ஆனால் தொட்டாலே விழுகின்ற கட்டிடத்தை கண்டுபிடித்த ஆட்சி, கடந்த அதிமுக ஆட்சி.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டி முடித்த அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கே.பி. பார்கில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மிகவும் மோசமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரி உள்ளார்.
2016 ஆம் ஆண்டு அதிமுக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 112.60 கோடி செலவில் 850 குடியிருப்புகள் கட்டப்பட்ட 2020 மே மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரை கொரோன சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தன. அடையாளம் தெரியாத நபர்களால் குடிநீர், கழிவு நீர் குழாய்க்குள் சேதமடைந்து உள்ளதை அறிந்து பழுது நீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. கடந்த வாரம் பெய்த மழையால் கட்டிடம் சேதமடைந்துள்ளது. தரம் மற்றும் உறுதி தன்மையை அறிய நானும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து ஏற்கனவே இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
ஐ.ஐ.டி. அறிக்கை அளித்ததும், தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த குடியிருப்பிற்கான குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டிடத்தின் தரத்தை ஐஐடி-யின் சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
சிறப்பு குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் மேலும் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.