அரசியல்

வசமாக சிக்கிய வேலுமணி..! : தயாராகும் சிறையின் அறை..?

உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை, சோதனை நடத்தி, பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரும் வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில், வலுவான ஆதாரங்கள் ஏதும் சிக்காததால் தான், அவரை கைது செய்யவில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடத்தியதில் வலுவான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வசம் சிக்கியுள்ளது. வேலுமணியை நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்ற குற்றவாளியாக நிரந்தரமாக சிறையில் தள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தற்போது கைது செய்யாமல், அதற்கான நேரத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை காத்திருப்பதாக தெரிய வருகிறது.

உள்ளாட்சித் துறையின் சிஐஜி அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், வேலுமணி ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமம் என்பது தெரிய வரும். சிஐஜி அறிக்கையில் வேலுமணி திட்டமிட்டே இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும். உள்ளாட்சித் துறையில் சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள், அது தொடர்பான குற்றப்பின்னணி குறித்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிலும் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு முன் கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக ஆளுநரிடம் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஆதாரங்களுடன் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். ஆளுநரிடம் திமுக கொடுத்த புகார்கள் ஏதோ பெயரளவுக்காக கொடுக்கப்பட்ட புகார்கள் அல்ல. ஒவ்வொரு துறையிலும் உள்ள முக்கிய அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட தகவல்களை ஒன்று திரட்டி ஆதாரமாக தயார் செய்துதான் ஊழல் புகார் பட்டியலை திமுக தமிழக ஆளுநரிடம் வழங்கியது.

உள்ளாட்சி துறையில் தெரு விளக்கு பல்பு வாங்கியதில் அன்றைய சந்தை விலையைக் காட்டிலும் பலமடங்கு அதிக விலைக்கு வாங்கியது உள்ளிட்ட புள்ளி விபரங்களை ஆதாரத்துடன் ஆளுநரிடம் வழங்கியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பல இடங்களில் வேலுமணி ஒரு ஊழல் மணி என்று விமர்சித்து பேசியது, அனைவரும் அறிந்ததே. இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கையை அன்றே ஸ்டாலின் பல இடங்களில் தெளிவாக கூறியிருக்கிறார்.

உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற டெண்டர்களில் வேலுமணியின் உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள் போன்றவர்களுக்கு மட்டும் தான் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு பதவிகளில் இருப்பவர்கள் இரத்த சொந்தங்களுக்கு டெண்டர்கள் வழங்கக்கூடாது என்பது விதி. வேலுமணியின் சகோதரர் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியது சட்ட விதி மீறல் ஆகும். வேலுமணியின் சகாக்களுக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்பதற்காகவே சட்ட விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

பல நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்வார்கள். அதில் குறைவான தொகையை குறிப்பிட்டு டெண்டர் கோரியவர்களுக்கு டெண்டர் வழங்குவது தான் சரியான நடைமுறை. ஆனால் குறிப்பிட்ட பணிக்கு குறிப்பிட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை குறிப்பிட்டு இவருக்கு வேண்டியவர்கள் டெண்டர் கோரியிருக்கிறார்கள். அதிகாரிகள் எந்தவித பரிசீலனையும் செய்யாமல் அவர்களுக்கு டெண்டர்களை வழங்கி இருக்கிறார்கள். டெண்டர் தொகையில் இரண்டு மடங்கு அதிகமாக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எவ்வாறு டெண்டர் கொடுக்கப்பட்டது. சிஐஜி அறிக்கையில் வேலுமணிக்கு இது போன்ற பல குற்றச்சாட்டுகள் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக 5 கோடிக்கு டெண்டர் எடுத்தால் 10 சதவீதம் கமிஷன் கொடுப்பார்கள். மீதி 4லு கோடிக்கு வேலை பார்ப்பார்கள். ஆனால் வேலுமணி அன் கோ 5 கோடி மதிப்பிலான டெண்டரை, 10 கோடிக்கு எடுத்து தரமற்ற பொருட்களை பயன்படுத்தி மூன்றில் ஒரு பங்கு தொகைக்கு மட்டும் பணிகளை செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவு முதலீட்டில் வேலுமணியின் உறவினர்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் ஐந்தாண்டுகளில் அதன் மதிப்பு இருநூறு மடங்காக உயர்ந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அறப்போர் இயக்கமும், திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதியும் வேலுமணி மீது வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்ய சொன்னது அதிமுக. அதிமுகவின் கோரிக்கையை நீதிமன்றம் மறுத்தது. பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக அரசு கூறியது. லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒரு வருடமாக இந்த வழக்கை விசாரணை செய்யாமல் காலம் தாழ்த்தியது. பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையும் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் கூறியது. ஆனால் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது. நீதிமன்றம் தான் ஆதாரம் இருக்கா? இல்லையா? என முடிவெடுக்கும் என்று கூறியது. அந்த சமயம் திமுக தரப்பில் ஆதாரங்களை வழங்கியுள்ளோம். விசாரணை செய்ய தேவை இல்லை. வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று வாதிட்டார்கள். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் மிகவும் நேர்மையான, திறமையான அதிகாரிகளை திமுக அரசு நியமித்துள்ளது. வேலுமணி சம்மந்தமாக ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வசம் உள்ளது. ஏற்கனவே நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரண செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது, தற்போது வேலுமணி அன் கோ வீடுகளில் நடைபெற்ற சோதனையில், ஆதாரங்கள் சிக்கவில்லை என சிலர் புரியாமல் பேசி வருகிறார்கள். வேலுமணியை கைது செய்வதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ளது. அது தொடர்பான மேலும் சில ஆதாரங்களை தற்போது நடைபெற்ற சோதனையில் எடுத்து வந்துள்ளார்கள்.

இந்த வழக்கைப் பொறுத்த வரையில் வேலுமணிக்கு தப்பிக்க முடியாத நெருக்கடியைத் தரும் வழக்காகவே இருக்கும். வேலுமணி நிரந்தர சிறைவாசியாகத்தான் வாழ்ந்தாக வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button