அரசியல்

தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல் தமிழக மக்களையும் கட்டுப்படுத்த பிரதமர் நினைக்கிறார் : ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, தமிழகத்துக்கு மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்துள்ளார். திருநெல்வேலி, தென்காசியில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளார். கன்னியாகுமரியிலுள்ள முளகுமூடு தூய ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை ராகுல்காந்தி கண்டுகளித்தார். மாணவர்களின் வழுக்கு மர ஏற்றம், யோகா, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர், ‘ஒரு நாள் நான் என் கைக்கும், ஒரு நாள் என் காலுக்கும், ஒரு நாள் என் மேல் நெஞ்சுக்கும் என பயிற்சி கொடுக்கிறேன். இதனால் என்னால் முழுமையாக என் உடலைப் பேண முடிகிறது. இதே போல் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். நாட்டுக்கும் இதே தான் தேவை. சமநிலை என்பது நாட்டுக்கு இப்போது தேவை. பயிற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அதேபோல இலவசமாய் அரசு தரும் பொருட்கள் எந்த வகையில் வந்தது என்று இதுவரை தெரியவில்லை. எல்லாப் பொருளுக்கும் விலை இருக்கிறது. தொடர்ந்து பயிற்சிகள் செய்தால் எதுவும் சாத்தியம் என மாணவ மாணவிகளிடம் கூறிய ராகுல் இதை தொடர்ந்து மாணவி ஒருவர் உடற்பயிற்சி குறித்து கேள்வி கேட்க, உடனடியாக தரையில் படுத்து தண்டால் எடுத்தார். ஒரு நிமிடத்தில் மாணவியை விட அதிகமான தண்டால்களை எடுத்தார் ராகுல் காந்தி. மாணவிக்கு சவால் விடும் வகையில் ஒரு கையாலும் தண்டால் எடுத்தார். ஆனால் அந்த மாணவியால் அதை செய்ய முடியவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறையின் தூண்கள். இருவருமே முக்கியமானவர்கள். எந்த ஒரு திட்டத்தையும், மாணவர்களையும் ஆசிரியர்களையும் விவாதிக்காமல் கொண்டுவந்தால் வீணாகத்தான் போகும். நீட் தேர்வு பல மாணவர்களின் கனவுகளை பலிவாங்குகிறது. நான், ஒரு மாணவனாக இல்லாமல் ஆசிரியராக இல்லாமல் உங்களை இப்படி படிக்கவேண்டும் என்று சொல்வது ஆதிக்கமானது. அதே சமயத்தில் உங்களுக்கு என்ன தேவை? என்னென்ன விஷயங்கள் செய்யலாம் என்று உங்களிடம் கேட்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நான், ஒருவொருடைய கனவை இன்னொருவர் மீது திணிக்க முடியாது. நீட் தமிழகத்தில் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது இது பயனில்லாத திட்டம்.

தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல் தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் மோடி நாட்டிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நாட்டில் பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியம் இருக்கிறது.

தமிழ் மொழிக்கு உன்னதமான கலாச்சாரம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாகரீகம் என தெரிவித்து வருகிறார். நரேந்திர மோடி தமிழ் நாட்டின் வரலாற்றை இந்தியாவின் வரலாறாக பார்க்கவில்லையா? தமிழின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை இந்தியாவின் பாரம்பரியமாக பார்க்கவில்லையா? ஒரு கருத்து இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்தக் கருத்தே நமக்கு தேவையில்லை.

’எனக்கு பிரதமர் மோடியை நினைத்து பயமில்லை. நான் இரவில் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன். ஆனால், தமிழக முதல்வர் தூங்குவாரா, அவருக்கு எவ்வளவு நேரமாகும். ஊழல் படிந்த தமிழக முதல்வராக இரவில் தூங்க முடியாது, அவர் நேர்மையானவர் இல்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேர்மையில்லாதவராக இருப்பதால்தான், பிரதமர் மோடிக்கு எதிராக எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை. தமிழக முதல்வர் ஊழல் நிறைந்தவராக இருப்பதால்தான் பிரதமர் மோடி தமிழக மக்களைக் கட்டுப்படுத்துகிறார்.

பிரதமர் மோடி, தமிழகத்தைத் தனது தொலைக்காட்சி போல் நினைக்கிறார். ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, தனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்கிறார். ரிமோட் மூலம்தான் மத்திய அரசு தமிழகத்தைக் கட்டுப்படுத்துகிறது. தேவைப்பட்டால் தொலைக்காட்சி ஒலியைக் கூட்டுகிறார், குறைக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் தமிழக முதல்வர் உரக்கப் பேசுவார், மெதுவாகவும் பேசுவார். தமிழக மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால், மக்கள் ரிமோட்டிலிருந்து பேட்டரியை எடுக்கப்போகிறார்கள், அவர்களைத் தூக்கி எறியப்போகிறார்கள்.

உப்பு தயாரிக்கும் இடத்துக்குச் சென்று அவர்களின் பணியைப் பார்த்தேன். அங்கு ஒரு தொழிலாளி என்னிடம், ‘உப்பு என்பது கரோனாவுக்கு எதிராகச் செயல்படும். அந்த உப்பைத் தயாரிக்கிறேன். இந்த உப்பு மருந்து தயாரிக்க அனுப்பப்படுகிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசிக்கு அனுப்பப்படுகிறது. உப்பு மட்டும் உற்பத்தி செய்யவில்லை. கரோனாவிலிருந்து நாட்டைக் காக்கிறேன்’ என்றார். இதுதான் தமிழகத்தின் அழகாக இருக்கிறது.

இந்தியாவின் வேலையின்மை மற்றும் சீன உற்பத்திக்கு கடும் போட்டி அளிக்க வேண்டுமானால், நாம் நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். செல்போன் முதல் துணிகள் வரை அனைத்தும் சீனாவில் இருந்துதான் வருகின்றன. இதைத் தடுக்க நமது சிறு, குறுந்தொழில்கள் மூலம்தான் சாத்தியம். வேலையின்மையையும் நாம் சிறு, குறுதொழில்கள் மூலம் போக்க முடியும். தமிழக அரசு சிறப்பாக, ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால், தமிழகத்திலும் மேட் இன் தமிழ்நாடு சாத்தியமாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.

லட்சக்கணக்கான இளைஞர்கள், நம்பமுடியாத அளவில் அதிகமான உத்வேகத்துடன், சக்தியுடன், கனவுகளுடன், வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், வேலையில்லாத இளைஞர்களை அதிகமாகக் காண முடியும். வேலை என்பது பெரிய சவாலாக இருக்கிறது’’ என்றார்.

ராபர்ட்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button