மீண்டும் துவங்கும் அரசியல் நாகரீகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு, எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, எதிர்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் ஆறுதல் கூறியதோடு அவர்கள் இருவரோடும் சிறிது நேரம் அமர்ந்திருந்தது அனைவராலும் பேசப்பட்டது.
இதற்கு முன் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அப்போதைய முதல்வர் பழனிச்சாமியின் தாயார் மறைந்த போது, அவரது இல்லத்திற்குச் சென்று துக்கம் விசாரித்தார். இது போன்ற அரிதான சம்பவங்களைப் பார்க்கும் போது, மறைந்து போன அரசியல் நாகரீகம் மீண்டும் தமிழகத்தில் ஸ்டாலின் மூலம் துவங்குகிறது என்று தான் தோன்றுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து கலைஞர் காலம் வரை (ஜெயலலிதா தவிர) ஏராளமான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. முதல்வராக இருந்த அண்ணா, இரண்டாம் உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். அப்போது எதிர்கட்சியான காங்கிரஸுக்கு அழைப்பு வந்தது. எதிர்கட்சித் தலைவர் காமராஜரை வரவேற்புரை ஆற்ற வைத்தார் முதலமைச்சர் அண்ணா. அந்த மாநாட்டில் தமிழறிஞர்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டது. அதில் கம்பரின் சிலையை பக்தவச்சலம் தான் திறந்து வைத்தார்.
இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வருகை தந்து வாழ்த்த வேண்டும் என கலைஞர் விருப்பப்பட்டார். ஆனால் காமராஜர் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் காமராஜரின் கார் மணமேடை வரைக்கும் வருவதற்கு கலைஞர் ஏற்பாடு செய்திருந்தார். காமராஜரும் வருகை தந்து திருமணத்தில் கலந்து கொண்டு, ஸ்டாலின், துர்கா தம்பதியினரை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அவரது உடல்நிலையைப் பற்றி திமுகவினர் யாரும் மேடைகளில் பேசக்கூடாது என்று கலைஞர் உத்தரவிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது கலைஞர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து மேடைகளில் அதிமுக பேச்சாளர் ஒருவர் பேசி வருகிறார். எம்.ஜி.ஆரிடம் சென்று, கலைஞர் மீது வைத்த விமர்சனங்கள் பற்றி மேடைகளில் பேசியதை கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர்., அப்படியெல்லாம் பேசக்கூடாது, கலைஞர் எனக்கும் தலைவராக இருந்தவர் என்று கூறி அந்த இடத்திலேயே அந்த பேச்சாளரை காரிலிருந்து இறக்கி விட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தெலுங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்திரராஜன் திருமணத்திற்கு, எம்.ஜி.ஆர்., கலைஞர் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருவருமே ஒன்றாக மேடையில் தோன்றி மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதே போல் திமுக&வும், காங்கிரசும் எதிரெதிராக இருக்கும் போது அண்ணாவை கடுமையாக விமர்சனம் செய்து காங்கிரசை சேர்ந்த ஒருவர் பேசியிருக்கிறார். அதேமேடையில் இருந்த காமராஜர் பேசியவரை உடனே கண்டித்திருக்கிறார்.
சித்தாந்த ரீதியாக வெவ்வேறு பாதைகளில் சென்றாலும், முரண்பட்ட அரசியல் கொள்கைகள் இருந்தாலும், அரசியல் நாகரீகத்தை சிதைக்க விடாமல் பார்த்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல்வாதிகள், அரசியல்ரீதியான பார்வை வேறு, அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வை வேறு என்கிற புரிதலோடு அவர்களின் செயல்பாடுகளும் இருந்தது.
அதன்பிறகு கலைஞர், ஜெயலலிதா அரசியல் களத்தில் இதுபோன்ற அரசியல் நாகரீகத்தை தப்பித்தவறிக் கூட பார்க்க முடியவில்லை. எதிர்கட்சிகள் என்ற நிலையைத் தாண்டி எதிரிக்கட்சியாகவே, இவர்கள் காலத்தில் பார்க்க முடிந்தது. சட்டமன்றத்தில் சந்திப்பதைக் கூட இருவரும் விரும்பியதில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியல் ஜெயலலிதா, கலைஞர் இருவருக்கிடையே வெறுப்பு அரசியல் வேரூன்றி இருந்தது. ஆனால் அரசியல் நாகரீகம் பற்றி கலைஞர் ஒருமுறை மேடையில் பேசும் போது, நட்பு வேறு, அரசியல் வேறு என்கிற அரசியல் நாகரீகத்தை தமிழ்நாடு தவிர எல்லா இடங்களிலும் பார்க்கலாம். தமிழ்நாட்டில் தான் உறவு மனப்பான்மை, நேசமனப்பான்மை, அரசியல் நாகரீகம் கிடையாது. தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜியும், கிராமங்களில் சொல்வது போல், ஜென்ம விரோதியாக இருந்தாலும் கூட ராஜாஜி மறைந்த போது கண்ணீர் வடித்தவர் தந்தை பெரியார். அதேபோல் பல தலைவர்கள் அரசியல் நாகரீகத்தை தமிழகத்தில் வளர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்று அரசியல் நாகரீகம் என்றால் என்ன விலை? எந்த கடையில் விற்கிறது என்று கேட்கும் அளவுக்கு அரசியல் நாகரீகம் அழிந்து போய்விட்டது’ என்று கலைஞர் பேசினார்.
ஜெயலலிதா அரசியல் நாகரீகம் பற்றி பேசும்போது ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியல் நாகரீகத்தை அடியோடு அழித்தவர் கருணாநிதி தான் என்று பேசினார். அரசியல் நாகரீகம் குறித்த கருத்துக்களில் கலைஞரும், ஜெயலலிதா இருவருமே அரசியல்ரீதியான குற்றச்சாட்டைத்தான் முன்வைத்தனர்.
2001&ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அந்த பதவியேற்பு விழாவில், பேராசிரியர் அன்பழகனுக்கும், ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. 17-&வது வரிசையில் தான் இடம் கொடுத்தார்கள் என்று கலைஞர் சொல்ல, அதை முற்றிலும் மறுத்தார் ஜெயலலிதா. சுனாமி நிவாரண நிதியை ஜெயலலிதாவை சந்தித்து ஸ்டாலின் கொடுத்த போது ‘அப்பா நல்லா இருக்காங்களா?’ என்று ஜெயலலிதா கேட்ட ஒரே ஒரு சம்பவம் தான், ஜெயலலிதா, கலைஞர் அரசியல் களத்தில் ஆரோக்கியமான சம்பவம் என்று பல பேர் பேசுவதும் உண்டு. ஆனால் சுனாமி நிதியை வழங்குவதற்கு, ஸ்டாலின் சென்ற போது, ஓரு மணி நேரம் அவரை காத்திருக்க வைத்து, இரண்டு நிமிடங்கள் தான், ஸ்டாலினுக்கு ஒதுக்கினார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.
தேர்தல் களத்தில் எதிர்ப்பட்ட தாக்குதலை, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே செய்ததுண்டு. ஒரு கட்டத்தில் கலைஞரின் உடல்நிலை குறித்து, ஜெயலலிதா நக்கலாக பேசினார். அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயலலிதாவை குட்டியானை என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தது இன்றும் அனைவருக்கும் நினைவிருக்கும்.
திமுக, அதிமுக என்று மாற்றுக் கட்சிகளில் சகோதரர்கள் இருவர் இருந்தால், கட்சிக்கு அப்பாற்பட்டு பொது நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலையில் தான் அவர்களின் உறவுகள் இருக்க வேண்டும். அவ்வாறு கலந்துக் கொண்டால், திமுகவில் நடவடிக்கை பாய்கிறதோ இல்லையோ, ஆனால் அதிமுகவில் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். அப்படியான அரசியல் நிலைப்பாட்டில் தான் ஜெயலலிதா இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது ‘அவர் மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டு இருந்தாலும், அவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்’ என்று வாழ்த்துச் சொன்னார் கலைஞர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, திமுக கட்சியினர் மத்தியில் அரசியல் நாகரீகத்தை மறுபடியும் பார்க்க முடிந்தது.
கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அதிமுக நிர்வாகிகள் அவர் உடல் நலம் குறித்து மருத்துமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்கள். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர் கட்சியாக செயல்படுவோம் என்று ஸ்டாலின் அப்போது கூறினார். டெல்டா மாவட்டங்களில், விவசாயிகள்? தொடர்ந்து இறந்து வந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு கொடுத்தார். ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம், சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது ஸ்டாலின் பாரட்டிப் பேசினார்.
ஆனால், அதன் பிறகு கலைஞரின் உடலை அடக்கம் செய்யும் விஷயத்தில், அதிமுக எதிரிக் கட்சியாகவே செயல்ப்பட்டது. அது போன்ற சம்பவங்களுக்கு பிறகு முதல்வராக இருந்த பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு, வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு, தற்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி அவரது வீட்டிற்கே சென்று மரியாதை செலுத்தியதோடு, பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் ஆறுதல் தெரிவித்தது, அரசியல் நாகரீகம் தமிழகத்தில் இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
–சூரியன்