அரசியல்தமிழகம்

எம்ஜிஆர் கொடுத்த கடையை பறித்து நடுத்தெருவில் நிறுத்திய அமைச்சர்..!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. ஆட்சியாளர்களும் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா, பிறந்தநாள் விழா போன்ற விழாக்களின் போது மட்டுமே அவரது படத்திற்கு மாலை போட்டு மலர் தூவுவதோடு எம்ஜிஆரை மறந்து விடுகிறார்கள். பிறகு தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக எம்ஜிஆர்யையும், ஜெயலலிதாவையும் பயன்படுத்துகிறார்கள். தேவைப்படும்போது மட்டும் தங்கள் தலைவரையும், தலைவியையும் பயன்படுத்தி அவர்களின் வழியில் நடக்கும் நல்லாட்சி என்று கூறி மார்தட்டிக் கொள்ளும் ஆட்சியாளர்கள், எம்ஜிஆர் கொடுத்த கடையை பிடுங்கி தனது உதவியாளர் மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு கடையை வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அராஜக போக்கை கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் எம்ஜிஆரின் வீட்டில் பணியாற்றிய சேகரன் என்பவர்.

விஜயபாஸ்கர்

மேலும் அவர் கூறுகையில் நான் ஆயிரம் விளக்குப் பகுதியில் குளம் அப்பாஸ் அலிகான் முதல் தெருவில் வசித்து வருகிறேன். நான் புரட்சித் தலைவரின் ராமாபுரம் இல்லத்தில் 1980 முதல் 1985 காலகட்டத்தில் பணிபுரிந்து வந்தேன். எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவனாக இருந்த காரணத்தால் அப்போதைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெண்டே அவர்களிடம் புரட்சித்தலைவரே எனது நிலையை கூறி எக்மோர் மருத்துவமனை வளாகத்தில் டீகடை நடத்திக் கொள்ள அனுமதி பெற்றுத்தந்தார். அன்றிலிருந்து 1985 முதல் 2016 ஆண்டு வரை கடையை நடத்தி வந்தேன்.

எம்ஜிஆர் வீட்டில் பணியாற்றிய சேகரன்

இந்த கடையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசின் அனுமதியை புதுப்பித்து முறையான அனுமதியுடன் தான் கடையை நடத்தி வந்தேன். கடைசியாக எழும்பூரில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மருத்துவ பணிகள்) அலுவலகத்தில் மாதவாடகை 4500 வீதம் ஆறுமாத வாடகை 27,000 ஐ முன்பணமாக செலுத்தி 2014 – 2017 ஆம் ஆண்டுகளுக்கான அரசின் அனுமதியை புதுப்பித்துள்ளேன். 2016 ஆம் ஆண்டு திடீரென தமிழ்நாடு மருத்துவ பணிக்காக அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக 35 வருடங்களுக்கு மேலாக நான் நடத்தி வந்த கடையை காலி செய்ய சொன்னார்கள். அதற்கு பதிலாக வேறு இடம் தருவதாகவும் கூறினார்கள். நான் அந்த கடையை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் எனது குடும்பத்தை நடத்தி வந்தேன்.

எனக்கு வேறு இடம் தருவதாக அதிகாரிகள் கொடுத்த உத்திரவாதத்தால் நானும் கடையை காலி செய்து கொடுத்தேன். நான் கடையை காலி செய்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனக்கு கடையை நடத்துவதற்கான இடத்தை ஒதுக்கித் தரவில்லை. நான் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எனக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும், எனது குடும்பத்தை நடத்துவதற்கும் மிகவும் கஷ்டப்படுகிறேன். இது சம்பந்தமாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரிடம் எம்ஜிஆர் அவர்களால் கொடுக்கப்பட்ட கடையை மீண்டும் எனக்கு வழங்குமாறு நேரில் சென்று கடிதம் கொடுத்திருக்கிறேன். நான் கடையை காலி செய்து நான்கு ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்படுகிறேன். இதுவரை எனக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை.

இதற்கு பிறகாவது எம்ஜிஆரின் பக்தனான எனக்கு முதல்வரும், துணை முதல்வரும் கடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறினார் சேகரன்.

சேகரனின் நம்பிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் நாமும் காத்திருப்போம்..

  • அன்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button