தமிழகம்

விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து நாடகம்… வி.ஏ.ஓ சஸ்பெண்டு…

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் பகுதியில் விவசாயியை அடித்து விட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது போல சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம உதவியாளர் மற்றும் பெண் வி.ஏ.ஓ ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியான கலைச்செல்வியை அவரது அலுவலகத்தில் சந்தித்த விவசாயி கோபால்சாமி என்பவர் பட்டாமாறுதல் தொடர்பாக பேசியுள்ளார்.

அப்போது காசு வாங்கிக் கொண்டு தனது தந்தை பெயரில் இருந்த பட்டாவை தனது பெரியாப்பா பெயருக்கு முறைகேடாக மாற்றிக்கொடுத்து விட்டீர்களா? என்று கேட்டு கோபால்சாமி சத்தமிட்டுள்ளார்.

இதையடுத்து ஆவேசமான கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவர் ஓடிவந்து கோபால்சாமியை கன்னத்தில் அடித்து கோபால்சாமியை தரையில் உட்காரவைத்தார்.

அதன்பின்னர் இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக, தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய்யாக குற்றம்சாட்டிய முத்துச்சாமி அங்கு வீடியோ எடுத்த இருவரின் தூண்டுதலின் பேரில் திடீர் என கோபால் சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகம் நடத்தினார்.

பின்னர் காலில் விழும் அந்த வீடியோவை, பட்டியல் இனத்தவரை காலில் விழவைத்து கொடுமைபடுத்துவதாக, கூறி வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர். இந்த வீடியோவை கண்டு பொங்கியவர்களின் தூண்டுதலின் பேரில், சம்பவம் தொடர்பான விசாரணைக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

முத்துசாமிக்கு சாதிய கொடுமை நிகழ்த்தப்பட்டதாக கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி பொய்யான சாட்சியம் அளித்த நிலையில் விவசாயி மீது சாதிய தீண்டாமை வன்கொடுமை வழக்கும், அரசு அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விவசாயியை, கிராம உதவியாளர் முத்துச்சாமி அடிக்கும் 2ஆவது வீடியோ வெளியாகி கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விவசாயியை அடித்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, அதற்கு உடந்தையாக இருந்த வி.ஏ.ஓ கலைச்செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அன்னூர் வட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்,

இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள அன்னூர் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்த வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு பேரம் பேசி படியாததால் ஒவ்வொரு வீடியோவாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட அந்த இரு கேமரா மேன்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பாபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button