பல்லடம் போலீசாரின் அதிரடி வேட்டை சிக்கிய 12 டன் குட்கா!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாகும். மேலும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளான பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடை மட்டுமின்றி விசைத்தறி, கோழிப்பண்ணை ஆகிய தொழில்கள் பிரதானமாக விளங்கி வருகிறது. இதனால் வடமாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் குடியேறி வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்லடத்தில் போலீசாரின் அதிரடி வேட்டையில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 டண் குட்கா ,ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து பல்லடம் டி.எஸ்.பி. வெற்றிச்செல்வம் தலைமையில் போலீசார் பல்லடத்தை அடுத்த லட்சுமி மில்ஸ் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மைக்கேல் ரெக்ஸ்(27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாராணை மேற்கொண்டதில் பல்லடம் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி விற்கும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மைக்கேலிடம் மேற்கொண்ட விசாரணையில் செம்மிபாளையம், கரடிவாவி மற்றும் காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடோன்களை அதிக வாடகை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மக்காச்சோளம் மற்றும் கருவாடு வியாபாரம் செய்வதாக கூறி குடோன்களை வாடகைக்கு எடுத்து ரகசியமாக லாரி மற்றும் வேன்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் செம்மிபாளையம் ஊத்துக்காடு, கரடிவாவி மற்றும் காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அங்கிருந்த சுமார் 12 டண் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜான் ரெஜு(28), ஊட்டியை சேர்ந்த சதீஸ்(32) மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(32) மற்றும் சாத்தான்குளத்தை சேர்ந்த மைக்கேல் ரெக்ஸ்(27) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கமாக ரூபாய். 6 லட்சத்து 73 ஆயிரத்து100ஐ கைப்பற்றியதோடு ஆட்டோ, மினி லாரி மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து நால்வரையும் சிறைக்கு அனுப்பினர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஊஞ்சபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மற்றும் கோவை கணபதியை சேர்ந்த குணா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
– நமது நிருபர்