திருப்பூர் அருகே சுகாதார சீர்கேட்டில் பூளவாடி ஊராட்சி
திருப்பூர் மாவட்டத்தில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு சுமார் 23 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பூளவாடி ஊராட்சி. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், வாரச்சந்தை, வணிக வளாகங்கள் போன்றவைகள் இருப்பதால் அதிகமான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் குடிமங்களம் ஊராட்சி ஒன்றியத்திலேயே பூளவாடி ஊராட்சிதான் மிகப்பெரிய ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பூளவாடி ஊராட்சியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்பட வில்லை. வாரச்சந்தைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகளும் பொதுமக்களும் வருகிறார்கள். இங்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி ஏதும் இங்கு செய்து கொடுக்கப்பட வில்லை. சந்தைகளில் ஏற்படும் கழிவுகளை அகற்றாமல் அருகிலேயே குப்பை மேடாக குவித்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கால்நடைகள் கழிவுகளை உட்கொள்ளும்போது குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அனைவரும் மூக்கை துணியால் மூடியவாறே நடந்து செல்கிறார்கள்.
சந்தையின் நிலைதான் இப்படி என்றால் இங்கு அமைந்திருக்கம் பள்ளியின் நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து அப்புறப்படுத்தாமல் பள்ளிச் சுவற்றின் ஓரத்திலேயே போட்டு தீயிட்டு கொளுத்துகிறார்கள். இதனால் வெளியாகும் நச்சுப்புகை காற்றில் கலப்பதால் அதனை சுவாசிக்கும் மாணவ, மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். மேலும் பள்ளியின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைந்திருப்பதால் இங்கு ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள். இந்த வழியாக வங்கி மற்றும் கடைவீதிகளுக்கு செல்லும் மக்களும் இந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் நச்சுப்புகையினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்புகிறார்கள். பூளவாடி ஊராட்சி முற்றிலும் சுகாதாரம் இல்லாத ஊராட்சியாகத்தான் காட்சியளிக்கிறது.
பூளவாடியில் என்னதான் பிரச்சனை இவ்வளவு நவீன காலத்திலும் ஏன் இந்த கிராமம் இவ்வளவு மோசமாக காட்சியளிக்கிறது என்று நாம் விசாரித்தபோது..
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் ஊராட்சி செயலாளரான சுதா என்பவரும் அரசாங்கத்திடம் சம்பளம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்களே தவிர ஊராட்சி வேலைகள் எதையும் செய்வதில்லையாம். பூளவாடி ஊராட்சி செயலாளர் சுதா அலுவலகத்திற்கே வருவதில்லையாம். பெரும்பாலான நேரங்களில் ஊராட்சி அலுவலகம் பூட்டியேதான் இருக்கிறதாம். பூளவாடி ஊராட்சியே சுகாதார சீர்கேட்டால் ஊரே துர்நாற்றம் அடித்துக்கிடக்கும் நிலையில் அருகில் உள்ள ஆத்துக் கிணத்துப்பட்டி ஊராட்சியையும் இந்த சுதாவே கூடுதல் பொருப்பாக கவனித்து வருகிறாராம்.
இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சி அலுவலகங்களிலும் இருக்காமல் அருகில் உள்ள பெரியபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று அந்த ஊராட்சி செயலாளருடன் பேசி பொழுதைக் கழித்துவிட்டு இருவரும் மாலை நேரங்களில் இருவரும் பூளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து கூத்தடிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்களாம். பூளவாடி ஊராட்சி செயலாளர் சுதா இவரது பணிகளை கவனிக்க ஓட்டலில் வேலை செய்யும் சமையல் மாஸ்டரை நியமித்திருக்கிறாராம். பூளவாடியைப் பொருத்தவரை அவர்தான் எல்லாமுமாக என்பது போல் செயல்படுகிறாராம். இந்த செயல்கள் அனைத்தையும் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லையாம். மாறாக அவர்களது வாகனத்திலேயே இவர்களை பிக்கப், டிராப் செய்கிறார்களாம். இந்த பிக்கப், டிராப் பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர் மேற்பார்வையாளர் பாலுதானாம்.
என்றோ ஒருநாள் திறந்திருக்கும் பூளவாடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் சுதாவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கச் சென்றால் அதனை வாங்காமல் மக்களை அலட்சியப்படுத்தி அனுப்புவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். ஒரு சாதாரண கிராம ஊராட்சி செயலாளரே சர்வ அதிகாரமும் உள்ளவராக தன்னை காட்டிக் கொள்கிறார். இவரை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியான வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் ஏன் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தங்கள் கடமையை உணர்ந்து மக்களின் குறைகளை நிறைகளாக மாற்றுகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். பூளவாடி ஊராட்சிக்கு ஒரு நாள் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.
- தே.முத்துப்பாண்டி