மாணவர்களுக்கு சாலட்.. பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் குரூப்… : அசத்தும் ஆசிரியை ரேவதி
பள்ளிப் படிப்பு தொடங்கும் ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்களுடன் தோழமையுடன் பழக ஆரம்பித்து, மனப்பாடக் கல்விக்கு மாற்றாகப் புரிதலுடன் கூடிய கல்வியை இனிமையாகவும் எளிமையாகவும் கற்றுத்தருகிறார் ஆசிரியை ரேவதி. இதற்காக இவர் மேற்கொள்ளும் கற்பித்தல் முயற்சிகள் வித்தியாசமானவை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகிலுள்ள அவலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியையான ரேவதி இதுகுறித்து கூறியதாவது,
“என் பூர்வீகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்பு, அவலூர் பள்ளிக்கு வந்தேன். நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. புதுசா பள்ளியில் சேரும்போது புதிய சூழலால் குழந்தைகளுக்குப் பயம் ஏற்படும். அதனால, அவங்க அச்சத்தைப் போக்கி, என்கிட்ட தோழமையுடன் பழகுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவேன். அதற்கு இரு வாரங்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகுதான் படிப்பைச் சொல்லிக்கொடுக்கவே ஆரம்பிப்பேன்.
அஞ்சு வயசுலயே படிக்கிற பாடங்கள் குழந்தைகளுக்குப் பசுமரத்தாணிபோல பதிஞ்சுட்டா, அடுத்தடுத்த வகுப்புகளிலும் அவங்களால நல்லா படிக்க முடியும். எனவே, எல்லா பாடங்களிலும் பெரும்பாலான பொருள்களை நேரில் காட்டித்தான் பாடம் நடத்துவேன். அது காய்கறிகள், பூக்கள், சின்னச் சின்ன அறிவியல் உபகரணங்கள்னு முடிந்தவரையிலான பொருள்களை நேரில் காட்டியும், வீடியோ வாயிலாகவும் விளக்கிக்கூறி பாடம் நடத்துகிறேன்.
சில மாணவர்கள் வீட்டுலிருந்து காய்கறிகள் கொண்டுவருவாங்க. நானும் ஸ்கூலுக்குக் காய்கறிகளை வாங்கிட்டுப் போவேன். பாடம் நடத்திய பிறகு, எல்லாக் காய்கறிகளையும் நறுக்கி சாலட் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்திடுவேன்.
பிறகு, சொல்லிக்கொடுத்த பாடங்களைப் பத்தி மாணவர்கள்கிட்ட கேட்பேன். இதனால் ஒன்றாம் வகுப்புல இருந்தே மனப்பாடம் செய்யாம அனுபவப் புரிதலும் பிள்ளைங்க பாடம் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலத்துல வாசிக்கக் கத்துக்கொடுத்திடுவேன். மாணவர்களின் சின்னச் சின்ன திறமைகளையும் ஊக்கப்படுத்தி பரிசுகள் கொடுப்பதால், அவங்க மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு வர்றாங்க” என்பவர், பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் குரூப் பற்றிப் பேசுகிறார்.
“என் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் தொடங்கியிருக்கேன். கற்ற பாடங்கள் குறித்து மாணவர்கள் பேசுறது, அவங்களோட சின்னச் சின்னத் திறமைகளையும் போன்ல வீடியோவா பதிவு செய்வேன். இதையெல்லாம் இந்த வாட்ஸ் அப் குரூப்ல தினமும் பதிவிடுவேன். இதைப் பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைறாங்க. பெரும்பாலான அரசுப் பள்ளிக் குழந்தைகளுடைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயங்களைப் பத்தி தெரிஞ்சுக்கமாட்டாங்க. ஆனா, என் வகுப்பு பிள்ளைகளின் படிப்புத் திறமையை தினமும் தெரிஞ்சுகிட்டு பெற்றோர் மகிழ்ச்சியடையிறாங்க. இதன் மூலம், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளைச் சீக்கிரமே நல்லா படிக்கிற நிலைக்கு மாத்திட முடியும்“ என்கிறார் மகிழ்ச்சியுடன்.
- சூரிகா