முதலாளித்துவ கொடுமைகளுக்கு கொரோனா கற்றுத்தந்த பாடம்..! : தா.பாண்டியன்
யுனைடெட் ஸ்டேட்ஸ்ஆஃப் அமெரிக்கா (USA)வில் மொத்தம் 50 மாநிலங்களில் 46 மாநிலங்களில் குடியேறியவர்கள்ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்தவர்கள். அதாவது ஸ்பெயின், ஜெர்மன், பிரான்ஸ் போன்றநாடுகளில் இருந்து குடியேறியவர்கள். அதனால் ஒரு மொழி, ஒரு தேசிய இனம் அங்கு கிடையாது.அதனால் ஐம்பது மாநிலங்களிலும் அவரவர்களுக்கு என்று தனித்தனியாக சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்.
இன்றைக்கும்14 மாநிலங்களில் அதிபர் டிரம்ப்பால் அந்த மாநிலங்களில் இருக்கும் சட்டத்தை மாற்ற முடியாது.நீக்கவும் முடியாது. பல மாநிலங்களவை ஒன்றிணைத்தது தான் அமெரிக்கா. அமெரிக்கா1930&1934 இல் ஏற்பட்ட நெருக்கடியை ஏணியாகவும், வாய்ப்பாகவும் பயன்படுத்தி உலகிலேயேபணக்கார நாடாக மாறிவிட்டது. 1936 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்கு ஹிட்லர் தயார் நிலைக்குவந்துவிட்டார். அதாவது குடியிருக்க இடம் வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அவரதுநாட்டின் மன்னர் ஹெய்கர் ஓடிப்போன பிறகு இவர் தலைமைக்கு வந்து விட்டார். ஜனநாயக முறையில்வந்தவர். சர்வாதிகாரியாக மாறினார். இதற்கு தடையாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர்களைஒடுக்கினார். இந்த கொடிய முறையை ஹிட்லர் துவக்கி வைத்தார். அது ஹிட்லருக்கும் வாய்ப்பாகஅமைந்தது. அமெரிக்காவிற்கும் வாய்ப்பாக அமைந்தது.
ஏனென்றால் சண்டை நடைபெற்ற இடம் ஐரோப்பா கண்டம், ஆப்பிரிக்கா, ஆசிய கண்டம், பேர்ல் துறைமுகத்தில் ஒரு குண்டு தவிர அமெரிக்காவில் பட்டாசு கூட வெடிக்க வில்லை. ஆயுதங்களை விற்று உலகப் பொருளாதாரத்தில் உச்சநிலைக்கு சென்றது அமெரிக்கா. உலகத்தை பிடிக்க நினைத்த ஹிட்லர் அழிந்தார். உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்ற அமெரிக்கா கோடீஸ்வர நாடானது.
இப்போது ஓபாமா வருவதற்கு முன் புஷ். அதாவது ஜார்ஜ்புஷ் வந்த போதே பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது. எப்போதுமே ஒரு நாட்டின் மீது படையெடுப்பை துவங்குவார்கள். உலக யுத்தத்தை துவங்குவார்கள். தீர்த்துவிடுவார். ஏனென்றால் தேசபக்தி வந்துவிடும். இப்பொழுது படையெடுக்க முடியவில்லை. எல்லா நாடுகளும் முன்னேறி இருக்கிறது. பணத்தை வைத்து அடிபணிய வைக்கலாம் என்றால் எல்லா நாடுகளுமே பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றில் தனித்துவம் அடைந்திருந்தது. எனவே இப்போது வணிகப் போட்டி மட்டும் தான் சாத்தியம் என்று அமெரிக்கா நினைத்தது. அந்தப் போட்டியிலும் இன்றைக்கு சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்கா சீனாவை விட ஆறு டிரில்லியன் டாலர் கடன் வாங்கி இருக்கிறது. கடன் வாங்குகிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது அமெரிக்கா. எங்கும் யாரிடமும் இப்போது கடன் வாங்க இயலாது. பணம் அதிகமாக குவிக்கப்பட்டிருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள கோயில்களில் தங்க நகைகளாக இருக்கிறது. பல கோயில்களை விட்டு விட்டாலும் சாய்பாபா கோயில் நிர்வாகம் மட்டும் தான் நவீன விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் கட்டியிருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி அவர்கள் வீட்டில் தான் இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் பணத்தை அரசு அவர்களிடம் பறிமுதல் செய்ய வேண்டாம். கொடுமைப்படுத்த வேண்டாம். அரசு அவர்களிடம் இருக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்ய வைத்து அதற்கான பத்திரத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னால் போதும். ஒரே நாளில் இந்தியாவின் கையிருப்புத் தொகை அமெரிக்க டாலரின் மதிப்பை தாண்டி விடும். அமெரிக்க டாலர் முப்பது ரூபாய்க்கு கீழே இருக்கும். நம்முடைய ரூபாய் முப்பது ரூபாய்க்கு மேலே இருக்கும்.
உலகப் பெரும் பணக்காரர்களில் 90 பேர் இந்தியர்களாக இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் சம்பாதித்த உபரி லாபப் பணத்தை நாட்டிற்கு அர்பணிக்க வேண்டும்.
அர்பணிப்பு என்றால்வரிவிதித்து வசூல் செய்யலாம். வரிவிதிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். ஆனால் செஸ் என்று அறிவிப்பு செய்தும் வழங்கலாம். இது சமூக நலனுக்காக. கொரோனாவைதடுப்பதற்காக என்று வழங்கலாம். நாட்டில் எந்த அறிவிப்பாக இருந்தாலும் பொருளாதார அறிஞர்களைவைத்து விவாதித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். காலை, மாலை, இரவு பல்வேறுகுழப்பமான அறிவிப்பு ஆட்சியாளர்கள் செய்யக்கூடாது. உழைக்கும் மக்களுக்கு எந்தவித வருவாயும்இல்லாத நிலையில், ஊரடங்கும் நீடிக்கிறது என்பதால் கடைக்கோடி மக்கள் அனைவருக்கும் ஒவ்வொருகுடும்பத்திற்கும் அவர்கள் கேட்கிற தொகையை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டு,ஒவ்வொரு மாநில அரசும் கேட்கிற தொகையையும் காலத்தின் அவசரம் கருதி உடனே வழங்க வேண்டும்.
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி மூலம் வழங்க வேண்டிய 4 ஆயிரம் கோடியை இன்னும் வழங்கவில்லை. உடனே அந்த தொகையையும் சேர்த்து கூடுதல் நிதியை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலசரக்கு, காய்கறிகள், அரிசி போன்ற பொருட்களை மலிவு விலையில் மக்கள் பிரதிநிதிகள், காவல்துறை, இராணுவம், அரசியல் கட்சிகள் சமூக சேவர்கள் போன்றவர்கள் மூலம் தனிமனித இடைவெளியுடன் வழங்க வேண்டும். கொரோனாவிற்கு கண்டிப்பாக மருந்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள்.
முதலாளித்துவ கொடுமைகளுக்கு கொரோனா நல்ல பாடத்தை கற்பித்திருக்கிறது. அரண்மனைகளில் வசிப்போரையும், மன்னர்களையும் விட்டுவைக்க வில்லை. சமீபத்தில் சவூதிஅரேபியாவில் அரண்மனையில் வசிக்கும் இளவரசிகளுக்கும் வந்திருக்கிறது. ஏழை, பணக்காரன் என்பது கொரோனா விட்டுவிடுவதில்லை. இதனை நாம் சொன்னால் விதியை மீறுகிறார்கள் என்று கார்ல்மார்க்ஸ் காலத்தில் இருந்து கம்யூனிஸ்ட்களை துரோகிகள் என்கிறார்கள். இப்போது நாங்கள் சொல்வதற்கு முன்னாலேயே வேலை செய்யாவிட்டாலும் அவனுக்கு பணம் கொடுங்கள். அவன் கடன் வாங்கி கட்ட முடியாவிட்டாலும் அதற்கு அவகாசம் கொடுங்கள் என்று மத்திய மாநில அரசுகள் முந்திக் கொண்டிருக்கிறார்கள். இதை சரியான நேரத்தில் சரியான சமயத்தில் செய்திருந்தால் கொரோனாவும் வந்திருக்காது. எந்த ஏழையும் பயமுறுத்தப்பட்டிருக்க மாட்டான். எனவே நாட்டின் நலன்கருதி ஆரோக்கியம், வருங்காலம் கருதி முதலாளித்துவம் கொள்ளையடிக்கும் உற்பத்திமுறையை கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தை கூட்டி கூட்டு முடிவு எடுக்க வேண்டும்.
– சூரியன்