தமிழகப் பொருளாதார நிலை… : சவாலில் வெல்வாரா ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் இந்த ஆட்சியின் முதல் ஆளுநர் உரையில் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கிட எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், அரவிந்த்சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பாகும்.
கடந்த 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயமாக்கல் கொள்கை துவங்கிய கட்டத்தில் மத்திய அரசுக்கு பொருளாதார அறிஞர்களுடைய ஆலோசனை தேவைப்பட்டது என்ற நிலையில்தான் அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜியை நிதியமைச்சர் ஆக்க வேண்டிய இடத்தில் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்க மத்திய அரசில் இடம்பெறச் செய்தார். பிற்காலத்தில் மாநில அரசுகளும் இம்மாதிரி ஆலோசனைக் குழுக்களை அமைத்தன.
தமிழகத்தில் கூட, 1996 ஆட்சி ஏற்பட்டவுடன் கலைஞர் வல்லுநர் குழுவின் ஆலோசனையின்பேரில் ஒவ்வொரு துறை முன்னேற்றத்திற்கும் அதன் அறிக்கை பெற்று, அதைத் தனித்தனியாக துறைவாரியாக ஆங்கில அறிக்கைகளாக பத்து சிறுசிறு தொகுதிகளாக வெளிவந்ததெல்லாம் தனித்தனி நினைவுகள்.
தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் தமிழகம் இருப்பதால், அதைத் தீர்க்கக்கூடிய அளவில் பொருளாதாரம், அறிவியல், சமூக இயல் என்பதை மையப்படுத்தி ஆலோசனைகளைப் பெற வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.
நோய்த் தொற்று மற்றும் பொருளாதார ரீதியானநெருக்கடியான நிலையில், தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில், இன்றைக்கு திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது தமிழக அரசின் கடந்த ஆட்சிக் கால கடன்கள் ஏறத்தாழ 7,77,800கோடிகள் கடந்த 2020&21 நிதிநிலை அறிக்கையின்படி இருப்பதாக தகவல். இந்தக் கடனோடு மாதாந்திரம், வருடாந்திரம் வட்டியும் கூடி கடன் சுமை நாளுக்கு நாள் கூடுகின்றது. இந்தக் கடன்கள் மாநில அரசு மற்றும்அதைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின்கடன்களை உள்ளடக்கியதாகும்.
தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த நிறுவனங்களின் மொத்தக் கடன் 2018 மார்ச் வரை 168 லட்சம் கோடிகள் ஆகும். இதற்கு அடிப்படைகாரணம் நிறுவனத்தின் வருவாயை விட நடப்பு செலவுகள் அதிகமாக உள்ளது. அதாவது வருமானத்தைவிட செலவுகள் அதிகம்.
இந்தக் கடன் சுமைகளைத் தீர்த்து நிலைமையைச்சமன்படுத்த வேண்டியது மட்டுமல்லாமல், கடந்த ஆட்சியில் நடந்த பிழைகளையும் திருத்த வேண்டிய நிலையில் தமிழக முதல்வர் இருக்கின்றார்.
தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி வகையிலும்தமிழகத்திற்கு வரவேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.
சில புள்ளி விவரங்கள் தமிழக அரசின் கடன் நிலவரம் 2021 முடிய 4.85 லட்சம் கோடியைத் தாண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால் கடன் குறித்து வெவ்வேறு இலக்காக புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
தமிழக அரசின் கடனும், தமிழக அரசின் பொது நிறுவனங்களின் கடனும் சேர்த்தால் 7 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று ஒரு கணக்கு. இதில் எந்தப் புள்ளிவிவரம் சரி என்று தெரியவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரே நிதியாண்டில் ரூ13ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறையின் அறிக்கை கூறுகின்றது. அதுபோல மருத்துவ காப்பீடு திட்டத்திலும் 1000 கோடி பயனற்ற முறையில் சென்று விட்டதாகவும் 2019ஆண்டிலேயே 4 லட்சம் கோடி தமிழக அரசின் கடன் எட்டப்பட்டுள்ளதாகவும் தணிக்கை துறை தெரவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் கடன் சுமை கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச்சு டன் முடிந்த காலத்திலேயே 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தத் தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது – தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்தில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாக இருந்தது. இந்தக் கடன் அளவு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக இருந் தது. அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து 172.07கோடி கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு அம்சங்கள் மூலமாக உள்நாட்டிலேயே பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தணிக்கைத் துறை. தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு மாரச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்த கடன்சுமை, கொரோனா போன்ற காரணங்களால் நிகழ் நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சுமையின் அளவு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும்.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால்,ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பெறும் கடன் நிதி வட்டிவிகிதம் அதிகரித்துக் கொண்டு போகிறது. கடந்த கால ஆட்சிகளால் தமிழக அரசின் நிதி சந்தை மீது வைத்துள்ள நம்பிக்கையும் குறைந்துவிட்டது.இப்படியான நிலையில் இன்றைக்கு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த நிறுவனங்களை சீர்திருத்தி நடத்த வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. நடப்பு நிதியாண்டில் தேவையில்லாத செலவுகளை ஒதுக்க வேண்டும்.
ஒரு உதாரணத்திற்கு கடந்த காலங்களில் தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் வாங்கியதற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின்சாரம் கூடுதலான விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம் இருக்கின்றது.
எப்பொழுதெல்லாம் அரசு நிறுவனங்கள் விலை நிர்ணயத்தில் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் ஏற்படும் நட்டத்தை தமிழக அரசு தலையில்தான் ஏறிவிடுகிறது.
இதுபோன்ற தேவையில்லாத செலவினங்களை கவனிக்காமல், பொறுப்பில்லாமல் கடந்த காலத்தில் நடந்ததால் இப்படி நிதி சுமை ஏறிவிட்டது.
பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் அதைச்சார்ந்தவையும், தொழில்கள் அதைச் சார்ந்த கட்டுமான அமைப்புகளும், போக்குவரத்து தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளும் தான் கைகொடுக்கின்றன. இவற்றில் சேவை மற்றும் தொழில்துறைகள் தமிழகத்தில்முன்னிலையில் இருக்கின்றன.
விவசாயத்தில் மாநில வருவாய் (ஜிடிபி) மொத்தம் சுமார்8 விழுக்காடு ஆகும். ஆனால் இதைச் சார்ந்துள்ளமக்கள் தொகை அதிகம். பருத்தி, நிலக்கடலை, பயிர்உற்பத்திக்கு வசதியான நீர்வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.
அதுமட்டுமல்ல நெல், கரும்பு போன்ற பயிர்களோடுகாய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எண்ணெய்வித்துக்களை தமிழகத்தில் அதிகமாகப் பயிரிடமுன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் பழ வகைகள் அதிகமாக விளைந்தாலும் அதை விற்பனை செய்யக்கூடிய வகையில் குளிர்சாதனத்துடன் கூடியரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சிறு குறு தொழில்கள், சுய உதவி குழுக்கள், தொழில்முனைவோருக்கு நீண்ட கால கடன்தொகை குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும். விவசாய இடுபொருட்களை மானிய விலையில் கொடுப்பதும், நீர் மேலாண்மையைச் சரிவர சீர்திருத்தி பயன்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
விளைந்த பொருள்களை உழவர் சந்தை போன்று சந்தைப்படுத்தலும் உள்ளிட்ட பிரச்சனைகளை மாநில அரசு கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழக அரசின் மீது தற்போதுள்ள 2.85 லட்சம் கோடி கடன் இந்த நிதியாண்டில் 3.50 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம்.
மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் பொருட்கள்தமிழகத்தில் அதிகம். அதை விற்பனைப் படுத்தக் கூடியவகையில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இறக்குமதியை விட ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு தங்களது சொந்த வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. மறுபுறம் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி எடுக்கப்படவில்லை.
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள் போன்ற மூன்று செலவினங்களுக்கு மொத்த வருவாய்க்கும் அதிகமாக இடைவெளிகள் உள்ளன. புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியவில்லை.
மாநிலஅரசின் நிதித்துறையின்; வலுவைப் பொறுத்தே எந்த ஒரு மாநிலமும் நல்ல முறையில் செயல்பட முடியும். நம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களாக உள்ளவை: 1. உள் மாநில வருவாய், 2. மத்திய அரசு வருவாய், 3. வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன். இந்த மூன்று ஆதாரங்களையும் வலுப்படுத்த சீரான மாநில நிதி அமைச்சகம் வேண்டும்.
அதாவது முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். அதற்கான திட்டமிடல்தான் இன்றையத் தேவை.
–கே.எஸ்.ராதாகிருஷ்ணன்