தமிழகம்

எம்சாண்ட் அனுமதி பெற்று ஆற்றுமணல் கடத்திய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் !

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே எம் சாண்ட் எடுக்க அனுமதி பெற்றுச் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், பொட்டல் என்னும் ஊரில் ஆற்று மணல் கடத்தியது தொடர்பான வழக்கைக் காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி வழக்கை வேறு அமைப்புக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 27 ஆயிரம் கன மீட்டர் ஆற்றுமணல் திருடப்பட்டுள்ளதாகவும், மணல் திருடியவருக்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எம்சாண்ட் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மணல் கடத்திய லாரிகளைப் பறிமுதல் செய்தபோது கையொப்பம் இல்லாத அரசின் அனுமதிச் சீட்டு கிடைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினர். அரசின் பல்வேறு துறைகளுக்குத் தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி இடம் ஒப்படைக்கக் கல்லிடைக்குறிச்சி காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

புதிதாக மணல் எடுக்க அனுமதி வழங்கினால் மணல் எடுக்கும் இடம், குவித்து வைக்கும் இடம் ஆகியவற்றில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்றும், மணல் எடுக்கும் இடத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button