விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தை தவறாக பயன்படுத்திய தமிழக கராத்தே சங்கங்கள் : வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்…
தற்காப்பு கலை என்பது ஒருவர் இக்கட்டான சூழலில் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படும் கலை. ஆதிகாலத்தில் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி மதங்களை பரப்புவதற்காக காடு மேடுகளை தாண்டி பயணிக்கும் போது மிருகங்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட கலை. பின்னர் நாடுகளுக்கிடையே ஏற்படும் போர் முறைகளில் கையாளப்பட்டது. பின்னர் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு உயிர் காக்கும் கலையாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் வீர மிக்க தமிழர்கள் சிலம்பம், சுருள்வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலையில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் முதலில் தற்காப்பு கலையாக கராத்தே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்டு பல்வேறு கராத்தே அமைப்புக்கள் தங்களது வகுப்புக்களை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் துவங்கியது. பின்னர் படிப்படியாக கராத்தே கலை அனைத்து பகுதிகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைப்புக்களை ஒன்றினைத்து சங்கங்கள் துவங்கப்பட்டன. அவ்வாறு துவங்கப்பட்ட சங்கங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம். இச்சங்கத்தின் பொருப்பாளர்கள் பெரும்பாலும் பல ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில் சங்கத்தை வைத்துக்கொண்டு மாவட்டம்தோறும் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை பொருப்பாளர்களாக நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சங்கத்தில் உறுப்பினராக கட்டணத்தை வசூலித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தங்களது சங்க அங்கீகாரம் பெற்றதாக கூறி பல்வேறு போட்டிகள் நடத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். ஆனால் தற்போது கராத்தே சங்கங்களின் அங்கீகாரம் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமாக தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்திற்கு எந்த அங்கீகாரமும் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கு செல்வதாக சுற்றுல்லா விசாவில் மாணவர்களை பயிற்சியாளர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதுபோன்று கோவையை சேர்ந்த கராத்தே ஆசிரியர் முத்துராஜ் என்பவர் அரசின் உயர்பதவியில் இருந்துகொண்டு பல முறை வெளிநாடு சென்று வந்துள்ளார். இதற்கு முத்துராஜ் அரசிடம் முறையாக அனுமதி பெற்றாரா? செய்த செலவுகள் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சென்னை அண்ணா நகரை சேர்ந்த கராத்தே ஆசிரியர் கெபிராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள அச்சப்படும் சூழலை கெபிராஜ் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான கெபிராஜ் மீது கராத்தே சங்கங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அங்கீகாரமற்ற சங்கங்கங்களை வைத்து எதற்காக கராத்தே பயிற்சி அளித்தார்கள்? கராத்தே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கடந்த 15 ஆண்டுகளாக சங்க நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க முன்வரவேண்டும் எனவும், தற்காப்பு கலையான கராத்தே குறிப்பிட்ட சிலரின் பிடியில் இருந்து மீட்டெடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்கள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நமது நிருபர்