திரைப்படத் துறையை காப்பாற்றிய புரட்சித்தலைவி அம்மாவை களங்கப்படுத்த முயற்சிப்பதா? என்று சர்கார் பட குழுவுக்கு நடிகர் ஜெ.கே.ரிதீஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெ.கே.ரிதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சினிமாத்துறை என்பது பொதுமக்களின் சிறந்த பொழுதுபோக்கு ஆகும். தங்களின் கஷ்டங்களை மறைப்பதற்காக சினிமாக்களை பார்ப்பதன் மூலம் ஒரு மன நிம்மதியாக மக்கள் கருதுகின்றனர். சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுது போக்கு அம்சமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட சினிமாத்துறையில் மற்றவர்களின் புகழை களங்கப்படுத்தும் வகையில் காட்சிகளை சித்தரிக்கக்கூடாது. அது தான் திரை உலகத்தின் தர்மம் ஆகும்.
மாறன் சகோதரர்கள் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது வெளி வந்திருக்கும் சர்கார் திரைப்படம் திரை உலகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கலைத்துறையை வாழ வைப்பதற்காக பல திட்டங்களை ஏற்படுத்தி தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை இழிவுப்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களுக்காக செய்த திட்டங்களை அவமரியாதை செய்யும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த காட்சியை எங்களை போன்ற திரை உலகத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
ஏனென்றால் இந்த திரைப்படைத்துறை 2006 முதல் 2011 வரை சன் டி.வி. ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இதனால் தனிநபர் யாரும் ஜெயிக்க முடியாமல் திரைப்படத்துறை முடங்கி போய் கிடந்தது. 2011-ம் வருடம் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா எங்களின் கோரிக்கையை தாய் உள்ளத்தோடு ஏற்று சன் டி.வி. பிடியில் இருந்த திரைப்பட துறையை காப்பாற்றியது மட்டுமல்லாது, நன்கு வளர்ச்சியடைய செய்தார். இதன் காரணமாக 50 ஆயிரம் திரைப்பட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. இதன் முத்தாய்ப்பாக திரைப்படத்துறை சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் 10 கோடி ரூபாயை தாய் உள்ளத்தோடு வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா. இப்படி திரை உலகத்திற்கு அம்மா செய்த சாதனைகள் திரைப்படத் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
அப்படி இருக்க சர்கார் திரைப்படத்தில் புரட்சித்தலைவி அம்மாவை களங்கப்படுத்தி இருப்பது, எங்களை போன்ற திரைப்பட துறையினருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. திரைப்பட துறையின் சார்பில் சர்கார் பட குழுவை வன்மையாக கண்டிக்கிறோம்.
அது மட்டுமல்லாது இந்த திரைப்படத்தில் மின்சாரத்தை பற்றியும், பொதுப்பணித்துறை பற்றியும், கல்வி பற்றியும், சுகாதாரத்துறை பற்றியும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தை எடுத்த இயக்குநர் முருகதாஸ் பீகார் போன்ற வடமாநிலங்களில் உள்ளதை போல் காட்சிகளை எடுத்துள்ளார். ஒன்றை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதனால் தான் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மைத் துறையாக விளங்கி வருகிறது. ஏன் சமீபத்தில் கூட 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படத் துறையில் போராட்டம் நடைபெற்று திரைப்பட உலகமே ஸ்தம்பித்த போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நம் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதனை சர்கார் படம் எடுத்துள்ள இயக்குநர் முருகதாசுக்கும், நடிகர் விஜய்க்கும் தெரியுமா?
இவ்வாறு ஜெ.கே.ரிதீஷ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.