அரசியல்

மதுரை நமது கோட்டை..! இதை யாராலும் மாற்ற முடியாது… : மு.க.அழகிரி அதிரடி

மதுரை நமது கோட்டை. இதை யாராலும் மாற்ற முடியாது. எத்தனையோ பேரை அமைச்சராக்கியிருக்கிறேன். ஆனால் ஒருவருக்குக்கூட நன்றி இல்லை. ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித் தந்ததே நான்தான்! – அழகிரி பேச்சு.

பரபரப்பாக எழுந்த ரஜினியின் அரசியல் வருகை அதே பரபரப்புடன் முடிந்திருக்கும் நிலையில், தென் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக மு.க.அழகிரியின் ஆலோசனைக் கூட்டம் பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு வருடங்களாக தி.மு.க-விலிருந்து நீக்கிவைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியல் பேசத் தொடங்கியிருக்கிறார்.

`அழகிரி நடத்தும் கூட்டமெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல’ என்பதுபோல் தி.மு.க தலைமை இருந்தாலும், அழகிரி இந்த 2021 தேர்தலை சற்று அதிரடியாகவே கையாள்கிறார். மதுரையில் பெரிய விழா அரங்கமான பாண்டி கோயில் அருகே நான்கு வழிச்சாலையை ஒட்டியிருக்கும் துவாரகா பேலஸ் அரங்கில் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அழகிரி வீட்டிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் கருணாநிதி, மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. பாண்டி கோயில் நான்கு வழிச்சாலையில் மாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

திறந்த வேனில் ஆதரவாளர்களுக்குக் கையசைத்தப்படி கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வந்தார் அழகிரி. கூட்டத்தில் பேசிய அழகிரி, “சதிகாரர்களையும் துரோகிகளையும் எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை, தி.மு.க-வின் கோட்டையாக்கினேன். திருமங்கலம் இடைத்தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெற்றோம். உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் ஃபார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு.

இப்போதும் நான் உங்களில் ஒருவன். மதுரை நமது கோட்டை. தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேறியபோது ஒருவர்கூட கட்சியைவிட்டு வெளியேறவில்லை. பேராசிரியர் அன்பழகனுக்குத் தெரியாமல் என்னைக் கட்சியிலிருந்து நீக்கினர். உடல்நிலை சரியில்லாத கருணாநிதியைக் கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிடச் செய்தனர்”.

`கலைஞரிடம் இல்லாததைச் சொல்லி என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். பிறந்தநாளுக்காகபொதுக்குழுவே வருக…’ எனக் கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு… ஸ்டாலினுக்குக்கூட `வருங்கால முதல்வரே வருக…’ என போஸ்டர் அடிக்கிறார்கள். ஸ்டாலின் எந்நாளும் முதலமைச்சராக முடியாது. அதை நாங்கள் விட மாட்டோம். எனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள்.

மதுரை நமது கோட்டை. இதை யாராலும் மாற்ற முடியாது. எத்தனையோ பேரை அமைச்சராக்கியிருக்கிறேன். ஆனால் ஒருவருக்குக்கூட நன்றி இல்லை. ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித் தந்ததே நான்தான்” என்றார்.

மேலும், “ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார். கருணாநிதியிடம் நான் எம்.பி பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்கவில்லை. அவராகக் கொடுத்தது. கலைஞருக்கு நிகர் அவர் மட்டுமே. நான் என்ன முடிவெடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள்” என்றார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button