ரயிலில் கொள்ளை…வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளி..!
ரயிலில் கொள்ளையடித்தே வெளிநாட்டில் ஹோட்டல் முதலாளியாகியுள்ள ஒரு நபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அன்பே சிவம் திரைப்படத்தில் வரும் ரயில் கொள்ளை காட்சி நமக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும். ஆனால் இதே போன்றதொரு சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் ஈரோடு போன்ற பெரு நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
அதிலும் குறிப்பாக முதல் வகுப்பு பெட்டிகளை குறிவைத்தே இந்த கொள்ளைகள் நடந்துள்ளன. இந்தக் கொள்ளையில் ஈடுபடுவது தனிநபரா? அல்லது ஏதேனும் கும்பலா? என தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி நின்றனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிப்டாப் உடையணிந்த ஆசாமி ஒருவர் நின்றுள்ளார். அவரின் செயல்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால், அவரை போலீசார் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆம் கடந்த நான்காண்டுகளாக ரயில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திமிஸிஜிஷி சிலிகிஷிஷி கொள்ளையன் இவர் தான் என்பது தெரியவந்ததும் போலீசார் அதிர்ந்து போனார்கள். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரயிலில் கொள்ளையடித்தே மலேசியாவில் ஹோட்டல் ஒன்று தொடங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் நெதர்லாந்தில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். இவருக்கு ஆறு மொழிகள் தெரியும். சாகுல் ஹமீதுவின் மனைவி இவரைவிட்டு பிரிந்து துபாயில் வசித்து வருகிறார்.அதனால் சஹானா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து மலேசியாவில் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களில் இருந்து ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பயணிகளிடம், குறிப்பாக பெண்களிடம் நன்கு பழகி நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர்கள் உறங்கிய பின்பு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கொள்ளையடித்த நகைகளை திருச்சூர், மற்றும் மும்பையில் தனக்கு தெரிந்த நபர்களிடம் கொடுத்து பணமாக்கியுள்ளார்.
அந்த பணத்தில் மும்பையில் ஒரு சொகுசு பங்களாவும், மலேசியாவில் நைசிவேலி என்ற பெயரில் ஒரு ஹோட்டலையும் சாகுல் ஹமீது வாங்கியுள்ளார் . இந்த ஹோட்டலின் 3 பங்குதாரர்களில் சாகுலின் மனைவி சஹானாவும் ஒருவர் ஆவார்.
இவரது ஹோட்டலில் மாதம் ஒரு முறை வெளிநாட்டு பெண்களை வரவழைத்து மாடல் ஷோவும் நடத்தியுள்ளார் . இதே போல் தனது ஹோட்டலில் பாலியல் தொழிலும் செய்துவந்துள்ளார்.
தற்போது தனது பங்குதாரரை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக கொள்ளையடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். இதையடுத்தே சாகுல் போலீசாரிடம் சிக்கியுள்ளார். மேலும், கடந்த 2010-ம் ஆண்டு நாக்பூரில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
2012 -ம் ஆண்டு பாலக்காடு போலீசாரால் திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாகவும் இவர் மீது புகார்கள் உள்ளன.
மேலும் சாகுல் ஹமீதிடம் இருந்து 110 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த கொள்ளை சம்பவங்களில் சாகுல் ஹமீதுக்கு வேறு யாரேனும் உதவியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.