கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் பிரபலமான பள்ளிகளில் தேவாங்கர் பள்ளிக் குழுமமும் ஒன்று. கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சிறந்த தேர்ச்சி சதவிகிதத்தையும் பெற்றிருக்கிறது தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும். தற்போது கடந்த வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பில் இருந்து பதினோராவது வகுப்பிற்குச் செல்லும் மாணவிகளிடம் கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்தினால் தான் நீங்கள் விரும்பும் பாட பிரிவுகளில் சேர முடியும் என்று வற்புறுத்துகிறாராம் உமாமகேஸ்வரி என்கிற ஆசிரியை. பணத்தை கட்டச்சொல்லி வற்புறுத்துவதால் , ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் வைரஸ் தொற்று , தொடர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது , பாலியல் ரீதியிலான சீண்டல் போன்ற புகார்களை பெறுவதற்கு இணைய வழியாக உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு தவணைகளில் எழுபது சதவிகித கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். இதை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளிக்க முன்வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளித்ததும் உடனடியாக அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும் காலத்தின் சூழ்நிலையையும், மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு கரிசனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.