போதைப்பொருள் கடத்தல்… பயங்கரவாத கும்பலுடன் தொடர்பா..?
தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும், குறிப்பாக அண்டை மாநிலங்களிலிருந்து இரயில் மூலமாக கஞ்சா கடத்தி வருவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் ஆபரேசன் கஞ்சா என்கிற பெயரில் தனிப்படைகள் அமைத்து இரயில் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். இதன்விளைவாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவும், கடத்தி வந்த வியாபாரிகளும் பிடிபட்டனர். கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் முடக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் வடசென்னை இராயபுரம் சரக உதவி ஆணையர் லெட்சுமணனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இராயபுரம் வரை குறிப்பிட்ட சில இடங்களில் சீருடை அணியாமல் ரகசியமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த துரந்தோ ரயிலில் கடந்த வாரம் இரவு வந்து இறங்கிய குமரவேல் என்பவரை கண்காணித்து ரகசியமாக பின்தொடர்ந்துள்ளனர். அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி தேவி கருமாரியம்மன் கோவில் சந்திப்பு அருகே வந்ததும், தன்னிடம் இருந்த பார்சலை மற்றொருவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் இருவரையும் பின்தொடர்ந்த தனிப்படை போலீசார் சிறிது தூரத்தில் இருவரையும் மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த பார்சலை பிரித்து சோதனை செய்த போது அதில் 500 கிராம் மெத்தா பெட்டமைன் என்கிற போதைப்பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் குமரவேல், காசிம் இருவரையும் இராயபுரம் என்-1 காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, நாகப்பட்டினம் மாவட்டம், கீவலூர் தாலுகாவிலுள்ள விழுந்தமாவடி என்னும் ஊரைச் சேர்ந்த அலெக்ஸ், அவரது தந்தை மகாலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் 600 கிராம் மெத்தா பெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
பல வருடங்களாக அலெக்ஸ், மகாலிங்கம், குமரவேல், காசிம் ஆகிய நான்கு பேரும் போதைப் பொருட்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள சிலரிடம் இந்த போதைப்பொருட்களை கொடுத்து ஹவாலா மூலமாக பணமாகவும், தங்கமாகவும் பெற்றுக்கொண்டு, போதைப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வந்ததாகவும், போலீசாரிடம் கூறியுள்ளனர். இவர்களிடம் கைப்பற்றிய போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு எழுபது லட்சம் ரூபாய் என்கிறார்கள். பின்னர் இந்த நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் காசிம் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கைதாகியுள்ளார். அலெக்ஸ் என்பவர் மீது நாகை மாவட்டம் கீவலூர் தாலுகா காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரது தந்தை மகாலிங்கம் மீது நாகை மாவட்டம் கீவலூர் தாலுகா காவல் நிலையத்தில் 11 வழக்குகளும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ழிசிஙி ல் ஒரு வழக்கு என 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போதைப் பொருட்கள் கடத்தலில் உள்ளவர்களிடம் கைதான நான்கு பேருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும், பயங்கரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து கைது செய்த இராயபுரம் சரக உதவி ஆணையாளர் லெட்சுமணன், தனிப்படையில் பணியாற்றிய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் இதுபோன்ற சம்பவங்களை நடத்திக் காட்டினால் சென்னையில் போதைப் பொருட்களின் நடமாட்டம் குறையுமோ! என்னவோ! என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இருந்தாலும் சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள் கடத்தியவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து சிறையில் அடைத்த உதவி ஆணையர் லெட்சுமணன் உள்ளிட்ட தனிப்படையினருக்கு நமது இதழின் சார்பாகவும் பாராட்டுக்கள்..
– கே.எம்.சிராஜூதீன்