“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை மதிக்காத மாநகராட்சி அதிகாரிகள் ! அதிருப்தியில் பெண்கள் !

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், அந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறு நேற்றையதினம் கூறினார்.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாலிக்கிராமத்தில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்தப்பட்டது. இதற்காக நேற்றைய தினமே கலைஞர் கருணாநிதி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்தனர்.
குறிப்பாக “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்திற்கு மனு வாங்கும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மனு வாங்கும் அதிகாரிகள் மாலை 3 மணிக்கே கவுண்டரை மூடிவிட்டு அடுத்த முகாமில் வாருங்கள் என பொதுமக்களை அனுப்பிவிட்டனர். மற்ற துறைகளுக்கு மனு வாங்கும் ஊழியர்களையும் கிளம்புமாறு சாலிக்கிராமம் உதவி பொறியாளர் ஆர் சுந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று பார்த்தபோது, நாளை நாங்கள் வேலைக்கு போக வேண்டாமா ? எவ்வளவு நேரம் வேலை பார்ப்பது ? இப்போது கிளம்பினால் தானே ஆறு மணிக்காவது வீட்டிற்கு போக முடியும் என லாஜிக் பேசினார். பின்னர் அனைவரும் கொண்டுவந்த மனுக்களுடன் திரும்பிச் சென்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கனிவாக பேசி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தியும், அரசு அதிகாரிகள் மெத்தனமாக நடந்துகொள்வதோடு, கடமைக்காக முகாமை நடத்தி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். உதவி செயற்பொறியாளர் ஆர் சுந்தர்ராஜன் போன்ற அதிகாரிகளின் செயல்பாடுகளே போதும், இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப, என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அதிகாரிகளின் மெத்தன போக்கால், திமுகவின் வாக்கு வங்கிதான் சரிவை சந்திக்கும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உதவி பொறியாளர் ஆர் சுந்தர்ராஜன் மீது உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டால் தான், மற்ற அதிகாரிகள் திருந்துவார்கள் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.