தமிழகம்

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு.. : தீவிரமாகும் விசாரணை..!

களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் இருக்கும் சோதனைச் சாவடியில் இரவு 9.45 மணியளவில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் 2 பேரால் கொல்லப்பட்டார்.

அப்பகுதியிலிருக்கும் மசூதி ஒன்றில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததில், வில்சனை கொலை செய்த 2 பேர், துப்பாக்கி, கத்தியுடன் மசூதியின் பின்பக்க வாசல் வழியாக ஏறி குதித்து, முன்பக்க வாசல் வழியாக வெளியேறி, கேரளா நோக்கிய சாலையை நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே நிறுத்தியிருந்த 2 கார்களில் இருவரும் தப்பிச் சென்ற தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில், அதிலிருந்த 2 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த அப்துல் ஷமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபீக் என்பதையும் தமிழக காவல்துறை கண்டுபிடித்தது.

தௌபீக், சமீம்

இருவரும் கேரளாவுக்கு கார்களில் தப்பிச் சென்றதால், அவர்களின் புகைப்படங்களை அந்த மாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை அளித்தது. இதனடிப்படையில், இருவரையும் கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் களியக்காவிளை -கேரளா சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை இருமாநில போலீஸாரும் ஆய்வு செய்து வந்தனர்.
2 பேரும், என்ஐஏ அமைப்பால் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் விசாரணையில் புதிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.

அதில் வில்சனின் முதுகு, வலதுகை விரல், இடதுகை விரல், வலது கால் ஆகிய 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்சனின் கழுத்து, நெஞ்சு பகுதியில் 2 தோட்டாக்கள் பாய்ந்து வெளியேறி இருப்பதாகவும், தொடையில் இருந்த இன்னொரு தோட்டா அகற்றப்பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாவட்ட அமலாக்க பிரிவு கண்காணிப்பாளரான ராஜராஜன், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கோழிக்கடை அதிபர் பிஸ்மி நவ்ஷாத் மற்றும் தென்காசி ஹனிபா ஆகியோரிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின் குமார் அபினபு தலைமையிலான தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியன் கொலை வழக்கில் ஹனிபா தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கொலையாளிகளுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கேரள மாநிலம் தென்மலை பாலருவியில் வைத்து 3 பேரைப் பிடித்து தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 4 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எஸ்ஐ வில்சனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஷமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவியதாக கூறப்படும் 2 பேரை பிடித்து கேரள மாநிலம் பாலக்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 2 பேரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பாலக்காடு போலீஸார், மேற்கொண்டு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேபோல், திருவனந்தபுரத்திலுள்ள வளியதுறை பகுதியிலும் ஒருவரை சந்தேகத்தின்பேரில் அந்நகர போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் குற்றவாளிகள் அப்துல் சமீம் முகத்தில் உள்ள தாடியை மழித்து விட்டும், தௌபீக் தலை முடியை முழுசா சிறியதாக வெட்டி விட்டும் மாறு வேடத்தில் கேரளா வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி சென்றனர். பின்னர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் இருவரையும் குமரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தனிப்படை எஸ்.பி

இதையடுத்து கடந்த 16-ம் தேதி குற்றவாளிகளை அதிகாலை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்த குமரி போலீஸ், அங்கு சாரியான பாதுகாப்புகள் இல்லாததால், பின்னர் குற்றவாளிகளை தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றியது. பின்னர் அவர்களிடம் நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார், அபினவ், தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத், புலன் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு அரசு மருத்துவரை வரவழைத்து அப்துல்சமீம் மற்றும் தௌபீக்கை பரிசோதனை செய்த பின் இரவு 9 மணிக்கு குழித்துறை மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜர் படுத்திவிட்டு இரவு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இருவரையும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனிப்படை எஸ்.பி ஸ்ரீநாத் கூறும் போது, “தமிழகத்தில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டியிருந்த நிலையில் டெல்லி, பெங்களூரில் அடுத்தடுத்து 6 தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனர். இவர்கள் எல்லாம் அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கின் கூட்டாளிகள். இதனால் அவர்களின் சதிதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாம்.

அதை பழிதீர்த்து கொள்ளும் விதமாக தான் களியக்காவிளை சோதனை சாவடியில் வில்சனை சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை கைப்பற்ற வில்லை. போலீஸ் கஷ்டடியில் அவர்கள் இருவரையும் எடுக்க கேட்கபட்டுள்ளது. அதன்பிறகு இவர்களின் இயக்கத்தை பற்றியும் அவர்களின் பின்னால் இருப்பவர்கள் பற்றியும் தெரியவரும்“ என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த வழக்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button