உடன்குடி அனல் மின் நிலைய நிலக்கரி முனையம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன..?
உடனகுடியில் தமிழக மின் வாரியம் 1,320 மெ.வாட் உற்பத்தியையொட்டி, ஆண்டுக்கு 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் துறைமுக முனையம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.ஆனால் இதனால் சுற்று சூழல் பாதிப்பு இருக்கும் என சொல்கின்றனர்.
உடன்குடி அனல் மின் நிலைய பணிகளுக்காக கல்லாமொழி கிராமத்தில் ஒரு நிலக்கரி துறைமுகம் அமைக்கும் வேலையை அதிமுக அரசு சத்தமில்லாமல் செய்து வந்தது. ஏற்கனவே உடன்குடி அனல் மின் நிலையம் அமைய இருக்கும் பகுதி உடன்குடி சுற்று வட்டார பகுதி மக்களின் இயற்கையான நீர்பிடிப்பு, மேய்ச்சல் பகுதி ஆகும். இந்த இயற்கை சூழ்நிலையை சீர்கெடுத்து சுமார் 1050 ஏக்கர் நிலத்தில் அனல் மின் நிலையம் அமையும் போது வறட்சியான உடன்குடி பகுதி மீண்டும் கடும் வறட்சி நிலையை சந்திக்கும். விவசாயத்துக்கு வருடத்தில் 10 நாட்கள் தாமிரபரணியில் இருந்து வரும் வெள்ள நீரை மட்டுமே பாசனமாக கொண்டு நடந்து வரும் விவசாயமும் முற்றிலும் அழியும். உடன்குடியின் புகழ் வாய்ந்த வெற்றிலை அழிந்து விட்ட நிலையில் உடன்குடி பனை தொழில், முருங்கை, தென்னை விவசாயமும் அனல் மின் நிலைய மாசு காரணமாக, அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் “மெர்குரி” காரணமாக அழியும் என சொல்கின்றனர்.
ஏற்கனவே தூத்துக்குடி அனல் மின் நிலையம் 1974 ல் தூத்துக்குடியில் அமைந்த பிறகு அங்கு மழை பொலிவு முற்றிலும் குறைந்து, 10 ஆண்டுக்கு ஒரு முறை தூத்துக்குடி கடும் வெள்ள பெருக்கு மழையால் சிக்கி தவிப்பது இயற்கை சமநிலையை சீர் குலையும்.
இந் நிலையில், அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு வர கல்லா மொழி கிராமத்தில் ஒரு நிலக்கரி துறைமுகம் கொண்டு வர அரசு திட்டமிட்டு அதி தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே 2009 ல் மணப்பாடு அருகில் ஒரு தனியார் துறைமுகம் கொண்டு வர முயன்ற போது மீனவ மக்களின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே போல இங்கும் நிலக்கரி துறைமுகம் என்னும் பெயரில் கடல் கரையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூண்கள் அமைத்து கன்வேயர் பெல்ட் மூலம் கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்க போகிறார்களாம்.
நிலக்கரி துறைமுகம் அமைய இருக்கும் பகுதி மன்னார் வளைகுடாவின் அரிய மீன் இனங்கள் உற்பத்தியாகும் பவளப்பாறைகள் அமைந்துள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்பதாலும் சுவை உள்ளதாலும் தான் இந்த பகுதி சிறப்பு பெற்று உள்ளது. மேலும் இங்குள்ள பவளப்பாறைகள் இயற்கையாக மழையை கொண்டு வரும் காரணியாக உள்ளது. இதனால் தான் அரசு கடற்கரை ஒழுங்காற்று விதி பிரிவு 5 ல் மன்னார் வளைகுடா பகுதியை பாதுகாக்க தனி பிரிவே ஒதுக்கி உள்ளது. மேலும் இந்த பகுதியில் கரையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் எந்த பணிகளும் நடைபெற கூடாது என்றும் விதிமுறைகள் உள்ளது, அரசின் விதிமுறைகளை அரசே மீறி இங்கு துறைமுகம் அமைக்கும் போது இந்த பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் மீனவ மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
கப்பல்களில் இருந்து கொட்டும் கழிவுகள், ஆயில்களால் கடல் மாசுபாடு ஏற்படும், தூத்துக்குடியில் உள்ளது போல வரும் காலங்களில் அனல் மின் நிலைய சாம்பல் கடலில் கொட்டப்பட்டு மீன் வளம் முற்றிலும் அழிக்கப்படும். தூத்துக்குடி கடலில் உள்ள முயல் தீவு, வான் தீவு பகுதிகள் இதே போல அழிக்க பட்டது குறிப்பிட தக்கது. மேலும் மீனவர்கள் தங்கள் தொழிலுக்கு செல்லும் போது பல கிலோ மீட்டர் சுற்றி கொண்டு செல்லவும், அவர்களின் வலைகள் கப்பல்களால் அறுத்தெறிய பட்டு விபத்துக்கள் ஏற்படும்.
வேம்பார் வரை கடல் அரிப்பு ஏற்பட்டது போல இங்கும் பெரியதாழை முதல் புன்னக்காயல் வரை கடல் அரிப்பு ஏற்படும்.
இது போக இதே இடத்தில் அதானி குழுமத்தின் சரக்கு பெட்டக துறைமுகமும், ஆறுமுகநேரி DCW நிறுவனம் VCM என்னும் வேதி பொருளை கொண்டு செல்ல குழாய் பதிக்கும் திட்டமும் இங்கே துறைமுக விரிவாக்கம் என்னும் பெயரில் வர இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மௌனிப்பது போல இந்த துறைமுக விவகாரத்தில் மௌனம் சாதிக்கிறது.
அதே போல மின்சாரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் இல்லை. தினமும் 12000 மெகாவாட் மின் தேவையை கொண்ட தமிழகம் உற்பத்தி செய்யும் மின் அளவு 21000 மெகாவாட் நமக்கு போக மீதம் உள்ள மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு நாம் கொடுக்கும் நிலையில் இது போன்ற திட்டங்கள் தேவையா? என்று தான் கேட்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 1000 கிலோ மீட்டர் நீள கடற்கரை உள்ள நிலையில் அலைகளில் இருந்தும், காற்றாலை மூலமும், சூரிய மின் சக்தி மூலமும் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று சிலரின் பார்வை. சிலர் திட்டம் வேண்டும் என சொல்கின்றனர்.
–கே.எஸ்.ராதாகிருஷ்ணன்