தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ-யின் 2-வது கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, 15 டிசம்பர் அன்று ஆஜராக வேண்டும் என்று இறுதிக்கெடு விதிக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாடகை காரில் ரகசியமாக சென்று ஆஜரானார். அவரைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆஜராகினர்.
விஜயபாஸ்கரையும், சரவணனையும் ஒரே அறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன்வைத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில், குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெறப்பட்டதாக உதவியாளர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், தாம் லஞ்சம் பெறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டில் குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்த பிறகும் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.
குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றாரா? என்பதை அறிந்துகொள்வதற்காகவே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.